நடிகர் ரவி மோகனுக்கு சுத்துபோட்ட வங்கி...மனைவி ஆர்த்தியுடன் வாழ்ந்த வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ்?
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் வாழ்ந்த வீட்டை நாளை ஆகஸ்ட் 25 ஆம் தேதி வங்கி நிர்வாகிகள் ஜப்தி செய்ய நோட்டீஸ் வெளியிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

ரவி மோகனின் வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ்
தனியார் பட தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பணம் வாங்கிவிட்டு திருப்பி தராததால் நடிகர் ரவி மோகனின் சொத்துக்களை முடக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இப்படியான நிலையில் நடிகர் ரவி மோகன் தனது மனைவியுடன் வாழ்ந்த வீட்டை வங்கி நிர்வாகம் ஜப்தி செய்ய நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். " ஜெயம் ரவி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் தன் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்தார். கடந்த பல மாதங்களாக அந்த வீட்டிற்கு செல்லாமல் இருந்த அவர், பேங்க் தவணையையும் செலுத்தாமலிருந்தார். நாளை காலை சுமார் 10.30 மணிக்கு பேங்க் நிர்வாகம் அந்த வீட்டை ஜப்தி செய்வதாக நோட்டீஸ் ஒட்டப்போகிறதாம்." என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் .
ரவி மோகன் மீது தயாரிப்பு நிறுனம் வழக்கு
பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடட் என்கிற பட தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடிகர் ரவி மோகன் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது இதற்கான அவருக்கு ரூ 12 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ 6 கோடி முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. முன்பணத்தை வாங்கிவிட்டு ரவி மோகன் இதுவரை படமும் நடித்து கொடுக்கவில்லை வாங்கிய முன்பணத்தையும் திருப்பி தரவில்லை என அந்நிறுவனத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் ரவி மோகன் புதிய படத்தின் தயாரிப்பு வேலைகளை தொடங்கியுள்ள நிலையில் வாங்கிய முன்பணத்தை வட்டியுடன் திருப்பி தரக் கோரி இந்த மனுவில் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 6 கோடிக்கு சொத்து உத்தவாதத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். சொன்ன தேதிக்குள் சொத்து உத்தரவாதத்தை ரவி மோகன் சமர்பிக்காததால் அவரது சொத்துக்களை முடக்க மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கியது. இதனால் ரவி மோகனின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என்கிற நிலை உருவானது.
தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த பின் ரவி மோகன் தற்போது தனியாக வாடகை வீட்டில் வசித்து வருவதாக தெரிவித்திருந்தார். மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்த போது அவர் வாங்கிய வீட்டிற்கு உரிமைகோருவது தொடர்வாகவும் வங்கி தவணையை கட்டுவது தொடர்பாகவும் மனைவி ஆர்த்தியுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






















