Angry Ranbir Kapoor: விளம்பரத்துக்காக ரசிகரின் செல்ஃபோனை தூக்கி எறிந்த ரன்பீர்... மீண்டும் திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
தன்னுடன் ஃபோட்டோ எடுக்க வரும் ரசிகரின் செல்ஃபோனை வாங்கி ரன்பீர் தூக்கி எறியும் வீடியோ அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வைரலானது.
இரண்டு நாள்களுக்கு முன் ரன்பீர் கபூர் ரசிகர் ஒருவரின் செல்ஃபோனைப் பிடுங்கி தூக்கி எறிவது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய நிலையில், இந்த வீடியோ விளம்பரத்துக்காக எடுக்கப்பட்டது என்ற உண்மைத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் ரன்பீர்
பாலிவுட்டின் ப்ராமிஸிங் நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கபூர் குடும்பத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் ரன்பீர் கபூர். தனது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தினை நாடு முழுவதும் கொண்டுள்ளார்.
80களின் பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகனான ரன்பீர் கபூர் நடிகர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவி இயக்குநராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பின் அவரது இயக்கத்திலேயே தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கிய ரன்பீர் சாவரியா படம் மூலம் 2007ஆம் ஆண்டு அறிமுகமானார்.
தொடர்ந்து சாக்லேட் நாயகனாக இளம் வயதினரை ஈர்த்து கவனமீர்க்கத் தொடங்கினார். ஆனால் 2011ஆம் ஆண்டு வெளியான ராக் ஸ்டார் படம் ரன்பீரின் நடிப்பு பயணத்தையே தலைகீழாகத் திருப்பி போட்டது. ராக் ஸ்டாரில் கோபக்கார கலைஞனாகவும் நடிப்பு அசுரனாகவும் உருவெடுத்து பாலிவுட் தாண்டி பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார்.
அலியா பட் உடன் திருமணம்
அதன் பின் பாலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவராக உருவெடுத்த ரன்பீர் பர்ஃபி, யே ஜவானி ஹே திவானி என ஒரு பக்கம் திறமையான படங்களைக் கொடுத்து வளர்ந்து வந்தாலும், மறுபுறம் பாக்ஸ் ஆஃபிஸில் தொடர் தோல்விப் படங்களையும் அளித்து வந்தார்.
மற்றொருபுறம் தீபிகா படுகோன், கத்ரினா கைஃப் என காதல் வாழ்விலும் கசப்புகள் தொடர இறுதியாக ’பிரம்மாஸ்திரா’ படப்பிடிப்பின்போது அலியா பட்டுடன் காதலில் விழுந்த ரன்பீர், அவரை சென்ற ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவரது நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் மறுபுறம் வசூல் சாதனை படைத்து சென்ற ஆண்டு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் படங்களின் வரிசையில் இடம்பிடித்தது.
வைரலான வீடியோ
இந்நிலையில் முன்னதாக நடிகர் ரன்பீர் கபூர் தன் ரசிகர் ஒருவரின் கைப்பேசியைப் பிடுங்கி தூக்கி எறியும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்னுடன் ஃபோட்டோ எடுக்க வரும் ரசிகர் தொடர்ந்து ஃபோட்டோஸ் எடுக்கும் நிலையில், ஒரு கட்டத்தில் எரிச்சல் தாங்காமல் செல்ஃபோனை வாங்கி ரன்பீர் தூக்கி எறியும் வகையில் உள்ள இந்த வீடியோ அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வைரலாகியது.
ஒரு புறம் இது மொபைல் ஃபோன் கம்பெனிக்கான விளம்பரமாக இருக்கலாம் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம் பெரும் கண்டனங்களைப் பெற்று இந்த வீடியோ இணையத்தில் சலசலப்பைக் கிளப்பி வருகிறது. மேலும் ஆங்ரி ரன்பீர் கபூர் எனும் ஹாஷ்டேகில் ஒட்டுமொத்த பாலிவுட் சமூகமும் ரன்பீருக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ரசிகர்கள் யூகித்தபடியே இந்த வீடியோ கைப்பேசி நிறுவனமான ஓப்போ கம்பெனியின் விளம்பரத்துக்காக பொய்யாக எடுக்கப்பட்டது என்ற உண்மை தெரிய வந்துள்ளது.
Just in case you’ve missed it, #RanbirKapoor hands a fan an upgrade of a lifetime with the new #OPPOReno8T 😉🔥
— OPPO India (@OPPOIndia) January 29, 2023
The new OPPO RENO 8T strikes the perfect balance between immersive visuals & a relaxed grip for an all-round premium experience ⚡️
Releasing Feb 3rd.#AStepAbove pic.twitter.com/8PBUZpZgrt
ஓப்போ நிறுனத்தின் ஓப்போ ரெனோ 8 மொபைல் ஃபோனுக்காக இந்த விளம்பரம் எடுக்கப்பட்டது என ஓப்போ ட்வீட் செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து இப்படிப்பட்ட தரக்குறைவான விளம்பரப் பணிகளில் இனி ஈடுபடாதீர்கள் எனக் கூறி அங்கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்!