Actor Rajesh Passed Away: ”அந்த 7 நாட்கள்” நடிகர் ராஜேஷ் காலமானார் - மரணத்திற்கான காரணம் என்ன?
Actor Rajesh Passed Away: தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராஜேஷ் தனது 75வது வயதில் காலமானார்.

Actor Rajesh Passed Away: தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்.
நடிகர் ராஜேஷ் காலமானார்:
தமிழ் சினிமாவின் குணசித்திர நடிகர்களில் ஒருவரான ராஜேஷ், தனது 75 வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்ததாக தெரிவிக்க்கபப்ட்டுள்ளது. பாக்கியராஜின் அந்த 7 நாட்கள் படத்தில் நடித்ததன் மூலம் இவர் பொதுமக்களால் வெகுவாக அறியப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களில் 150-க்கும் அதிகமான படங்களில் ராஜேஷ் நடித்துள்ளார். கே. பாலச்சந்தர் இயக்கிய "அச்சமில்லை அச்சமில்லை" படத்தில் நடித்த ராஜேஷ் ஏராளமான குணச்சித்திர வேடங்களில் ஏற்று நடித்தார். கமல்ஹாசனுடன் "சத்யா" , "மகாநதி" மற்றும் "விருமாண்டி" போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு, அவருடனான நினைவுகளையும் வேதனையும் பகிர்ந்து வருகின்றனர்.
யார் இந்த ராஜேஷ்?
கடந்த 1949ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தவர் ராஜேஷ். திண்டுக்கல், வடமதுரை, மேலநத்தம் மற்றும் சின்னமனூர் தேனி பகுதிகளில் பள்ளி படிப்பை முடித்தவர், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பியுசி முடித்தார். தொடர்ந்து பச்சையப்பாஸ் கல்லூரியில் இணைந்தாலும், அவர் தனது கல்லூரி படிப்பை பூர்த்தி செய்யவில்லை. இதன் பிறகு புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1972 முதல் 1979ம் ஆண்டு வரை ஆசிரியராக பணியாற்றினார். 1983ம் ஆண்டு ஜோன் சில்வியா வானதிராயர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர். ராஜேஷின் மனைவி கடந்த 2012ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட பயணம்:
ஆசிரியராக பணியாற்றிய காலகட்டத்திலேயே, 1974ம் ஆண்டு அவள் ஒரு தொடர் கதை என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து 1979ம் ஆண்டு கன்னி பருவத்திலே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதைதொடர்ந்து ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். 50 அண்டுகளில் 150-க்கும் அதிகமான படங்களில் நடித்த ராஜேஷ், கடைசியாக விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்து இருந்தார். இதுபோக பல நாடகங்கள் மற்றும் வெப்சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவை தாண்டி:
சினிமாவை தாண்டி ஓட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் ராஜேஷ் சிறந்து விளங்கினார். ஹாலிவுட் நடிகர்களின் பயோகிராபிகளை எழுதும் எழுத்தாளராகவும் செயல்பட்டார். கிறிஸ்துவரான இவர் பெரியார் கொள்கைகளை பின்பற்றவராக செயல்பட்டு, கடைசி காலங்களில் ஜோதிடம் தொடர்பாக தீவிரமாக எழுதி வந்தார். சினிமா படப்பிடிப்பிற்காக பங்களா கட்டிய முதல் தமிழ் நடிகர் என்ற பெருமை ராஜேஷையே சேரும். அந்த வீட்டை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்து இருந்தார். 1987-91 வரை தீவிர அரசியலில் ஈடுபட்டு, ஜானகியின் ஆதரவாளராகவும் செயல்பட்டுள்ளார்.





















