ஆசைப்பட்டு வாங்கிய வீடு.. ராகவா லாரன்ஸ் நீங்க தங்கம் சார்.. உச்சி முகர்ந்து பாராட்டும் ரசிகர்கள்!
நடிகர் ராகவா லாரன்ஸ் ஆசையாக கட்டிய முதல் வீடை தானமாக கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

நடன கலைஞர், நடிகர் இயக்குநர் என பன்முகத் திறமையோடு தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த அடையாளத்தை பிடித்திருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர், பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் உயர்ந்து போற்றப்படுகிறார். தற்போது இவர் காஞ்சனா 4, பென்ஸ் உள்ளிட்ட பிற படங்களில் நடித்து வருகிறார். முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹாரர் காமெடி வகை சார்ந்த படங்களை இயக்கி ஹிட் கொடுத்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.அந்த வகையில் அவரது இயக்கத்தில் வெளியான காஞ்சனா, காஞ்சனா 2. காஞ்சனா 3 படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளன. தற்போது காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
முதல் முறையாக நான் கட்டிய வீடு
அதில், காஞ்சனா 4 படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. நான், எப்போதும், படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினாலும், அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒரு நல்ல காரியத்திற்கு எடுத்து வைத்துக் கொள்வேன். டான்ஸராக இருக்கும்போது வாங்கிய சம்பளத்தை மிச்சப்படுத்தி அம்மாவிடம் கொடுத்து விடுவேன். அம்மா அந்த பணத்தை சேர்த்து வைத்து வாங்கிய நிலத்தில் கட்டிய வீடு தான் இப்போது நீங்கள் வீடியோவில் பார்ப்பது. முதல் முறையாக நான் கட்டிய வீடு. இந்த வீட்டை பசங்களுக்கு கொடுத்துவிட்டு வாடகை வீட்டிற்கு செல்லலாமா என்று அம்மாவிடம் கேட்டேன். அப்படி நாங்கள் கொடுத்த இந்த வீட்டை இப்போது நல்ல விஷயத்திற்கு பயன்படுத்த இருக்கிறோம். 20 வருடங்கள் கழித்து இந்த வீட்டை பார்க்கும் போது வித உணர்வு தோன்றுகிறது. இங்கு எத்தனை பேர் சாப்பிட்டாங்க, இருந்தாங்க, இலவசமாக நாம் என்ன செய்தோம் என்பதை யோசித்து பார்த்திருக்கிறேன். ஆனால், ஒருவருக்கு கல்வி மிக முக்கியமானது. கல்வி இருந்தால் எதையும் பெற்றுக்கொள்ளலாம்.
வீடை தானமாக கொடுத்த ராகவா லாரன்ஸ்
முதல் முறையாக நான் கட்டிய இந்த வீட்டை சில மாற்றங்கள் செய்து பள்ளிக்கூடமாக மாற்றி இலவச கல்வி கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இதே வீட்டில் வளர்ந்த பெண் இந்த பள்ளிக்கூடத்தின் முதல் ஆசிரியராகிறார். இப்போ அவர்கள் தான் நான் கட்டப் போகும் பள்ளியின் முதல் டீச்சர் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் ராகவா லாரன்ஸை மனதார பாராட்டி வருகின்றனர். மேலும், கல்வி மிக மிக அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.





















