HBD Thiyagarajan: நடிகர் பிரசாந்தின் தந்தையைத் தேடி வீட்டுக்கே சென்ற எம்.ஜி.ஆர் - என்ன நடந்தது?
நடிகர் பிரசாந்தின் தந்தையும், நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தியாகராஜனுக்கு இன்று 78வது பிறந்தநாள் ஆகும்.
தமிழ் திரையுலகின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தியாகராஜன். 1990, 2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவையே கலக்கிய நடிகர் பிரசாந்தின் தந்தையான இவருக்கு இன்று 78 வயதாகிறது. அலைகள் ஓய்வதில்லை படத்தில் மதத்தில் ஊறிப்போன இளைஞராக நடித்து, முதல் படத்திலே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருப்பார்.
பாக்ஸிங்:
ஒரு முறை இவரைத் தேடி மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரே நேரில் சென்ற சம்பவம் நடைபெற்றது. தனியார் வார இதழ் ஒன்றுக்கு நடிகர் தியாகராஜனே இந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
“ நான் வலுவாக இருக்க காரணமே பாக்சிங்தான். காலையில் இரண்டு மணி நேர ஓட்டம், ஸ்கிப்பிங், டயட் என கண்டிப்பான பயிற்சிகள் பாக்சிங்கில் இருந்தது. நான் பாக்சிங் பயிற்சியில் இருந்தபோது அலைகள் ஓய்வதில்லை படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியை வைத்து என்னை ஒரு மேடையில் பாக்சிங் செய்யக்கூறி போஸ்டர் ஒட்டிவிட்டார்கள். இது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்து விட்டது.
நேரில் தேடி வந்த எம்.ஜி.ஆர்.:
அலைகள் ஓய்வதில்லை வெற்றி விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.ஜி.ஆர். எனக்கு கேடயம் வழங்கினார். அப்போது, அவர் தியாகராஜன் நீங்கள் பாக்சர் என்று கேள்விப்பட்டேன். தொடர்ந்து மேடையில் பாக்சிங் செய்ய உள்ளதாகவும் கேள்விப்பட்டேன். அப்படி சண்டையிடும்போது உங்களுக்கு அடிபட்டுவிட்டால் உங்களை நம்பி பணம் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்கள் பாதிப்படைவார்கள். அதனால், நீங்கள் இனிமேல் பாக்சிங் பண்ணக்கூடாது, இது என் அன்பு கட்டளை என்று சொன்னார்.
அன்று முதல் பாக்சிங் செய்வதை விட்டுவிட்டேன். அதன்பிறகு எனக்கு ஒரு படப்பிடிப்பில் அடிபட்டு விட்டது. அப்போது, எனக்கு திடீரென போன் வந்தது. முதலமைச்சர் உங்களை பார்க்க வருகிறார் என்று கூறினார்கள். நேராக என் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர், பாக்சிங்கலயா அடிபட்டது? என்று கேட்டார். இல்ல சார் ஷூட்டிங்கில் என்று கூறினேன். அதன்பிறகு பூவுக்குள் பூகம்பம் என்ற படத்தை இயக்கினேன். அந்த படத்தை எம்.ஜி.ஆருக்கு போட்டுக் காட்டினேன். படம் பார்த்த அவர் உற்சாகம் ஆகிவிட்டார்.
தியாகராஜனுக்கு வந்த மக்கள் திலகம்
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். ஒரு ஆடியோ வெளியீட்டிற்கு முதலமைச்சர் வருவாரா? என்று பலரும் கேலி செய்தனர். ஆனால், அந்த விழாவிற்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வந்தார். அதன் பிறகுதான் பாடல் வெளியீட்டு விழா வைக்கனும்னு ஃபார்முலா தொடர்ச்சியாக கடைபிடிக்கத் தொடங்கினர்.
இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
நடிகர் தியாகராஜன் கமல்ஹாசனுடன் டிக் டிக் டிக், ரஜினிகாந்துடன் பாயும் புலி, விஜயகாந்துடன் நல்ல நாள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமின்றி மலையாள சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டியுடன் புது தில்லி, மோகன்லாலுடன் எண் 20 மெட்ராஸ் மெயில், ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பல பிரபலங்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தியாகராஜன் கன்னடம், தெலுங்கு, இந்தியிலும் நடித்துள்ளார். நடிகர் பிரசாந்தின் தந்தை மட்டுமின்றி இவர் நடிகர் விக்ரமின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.