நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் - நடிகர் மணிகண்டன்
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும் கூறினார்.
குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி, ஹரிஷ் குமார், கீதா கைலாசம் , ஹரிணி , நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து நேற்று பிப்ரவரி 3 ஆம் தேதி இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது.
லவ்வர் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் இரண்டிலும் கதாநாயகனாக நடித்துள்ள மணிகண்டன் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் இந்த வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்கிற கருத்து ஒருபக்கம் முன்வைக்கப்பட்டாலும் மற்றொரு தரப்பினருக்கு கொஞ்சம் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இப்படியான நிலையில் லவ்வர் படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வார்த்தைகளை நீக்க அல்லது மியூட் செய்யக் கோரி சென்சார் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் லவ்வர் திரைப்பட குழுவினர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மணிகண்டன், கல்லூரி காலம் முடிந்த பிறகு இளைஞன் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்த கதை அம்சத்துடன் காதலை மையமாக கொண்டு இந்த படம் தயாராகி இருப்பதாக தெரிவித்தார். திரைப்படம் என்ற ஒரு எண்ணம் மக்களுக்கு வராத மிக தத்ரூபமாக வாழ்க்கையை எடுத்து கூறும் விதத்தில் படம் உருவாகி உள்ளதாகவும், இந்த படத்தின் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ள கௌரி மற்றும் தான் உட்பட அனைவரும் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளதாகவும் கூறிய அவர், வருகிற ஒன்பதாம் தேதி படம் திரைக்கு வர உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஜெய்பீம் படத்திற்கு தனக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி வருத்தப்படவில்லை எனவும், ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போதும் மிக விரும்பியே தான் நடிப்பதாகவும் சுட்டி காட்டினார். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும் கூறிய அவர், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். தொடர்ந்து நடிகர் டெல்லி கணேஷ் குரலில் மிமிக்கிரி செய்த மணிகண்டன் லவ்வர்ஸ் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.