27 Years of Sundara Purushan: லிவிங்ஸ்டன் ஹீரோவாகி 27 வருஷமாச்சு.. சுந்தர புருஷன் படம் வெளியான நாள் இன்று..!
வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிவிங்ஸ்டன் முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்த சுந்தர புருஷன் படம் வெளியாகி இன்றோடு 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிவிங்ஸ்டன் முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்த சுந்தர புருஷன் படம் வெளியாகி இன்றோடு 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
மறுத்த தயாரிப்பாளர்கள்
சுந்தர புருஷன் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை லிவிங்ஸ்டன் எழுதியிருந்தார். படத்தின் வசனங்களை இயக்குனர் சபாபதியுடன் இணைந்து அவர் எழுதிய நிலையில், இந்தப் படத்தின் கதையை கேட்ட தயாரிப்பாளர்கள் பலரும் லிவிங்ஸ்டன் படம் இயக்கலாம். ஆனால் ஹீரோவாக நடிக்கக் கூடாது என நிபந்தனை விதித்தனர். ஆனால் பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி லிவிங்ஸ்டன் மீதான நம்பிக்கையில் படத்தை அவர் இயக்கி நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் படத்தை சபாபதி தான் இயக்கியிருந்தார். சுந்தர புருஷன் படத்தில் ரம்பா, வடிவேலு,வடிவுக்கரசி வினுசக்கரவர்த்தி, சௌமியன், மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சிற்பி படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
தனது தாய் இறந்த பிறகு பாட்டி வடிவுக்கரசியுடன் வசித்து வரும் லிவிங்ஸ்டன், தன் அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகனான வடிவேலுவை தன் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறார். சிறுவயதிலிருந்தே லிவிங்ஸ்டன் தன் உறவுக்கார பெண்ணான ரம்பாவை காதலித்து வருகிறார். அதேசமயம் ரம்பாவோ வேலை தேடிக் கொண்டிருக்கும் அதே ஊரைச் சார்ந்த ஆதரவற்ற சௌமியனை காதலிக்கிறார். இதனிடையே சௌமியனுக்கு வேலை வாங்கித் தரும் லிவிங்ஸ்டன் ரம்பாவுடன் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதை அறிந்து வருத்தம் கொள்கிறார். தன் அண்ணன் வருத்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியாத வடிவேலு சௌமியன் மீது கொலை பழி சுமத்தி திருமண நாள் அன்று சிறைக்கு அனுப்புகிறான். பின் லிவிங்ஸ்டனுக்கும் ரம்பாவுக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் வடிவேலுவின் சதி திட்டம் ரம்பாவிற்கு தெரிய வர அவர் என்ன முடிவு எடுத்தார் என்பதை இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.
சிறப்பாய் அமைந்த பாடல்கள்
வைரமுத்து, காளிதாசன், இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா, சரவணஞானம் ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதிய நிலையில் சிற்பி இசையமைத்திருந்தார். ‘செட்டப்ப மாத்தி கெட்டப்பை மாத்தி’, ‘மருத அழகரோ’ உட்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய இந்தப் படத்தின் மூலம் லிவிங்ஸ்டனை ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இதன் பிறகு சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே அவர் ஹீரோவாக நடித்திருந்தார். மற்றபடி ரஜினி,விஜய்,அஜித் தொடங்கி பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி மற்றும் முக்கியமான வேடத்தில் லிவிங்ஸ்டன் இன்றளவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.