நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.. ஓஹோ எந்தன் பேபி பட விழாவில் கார்த்தி உருக்கம்.. சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு
ஓஹோ எந்தன் பேபி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி தனது அண்ணனை பற்றி பேசியது சூர்யாவின் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பையும் தாண்டி தான் நடிக்கும் படங்களை அவரே தயாரித்து வருகிறார். இந்நிலையில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அவரது தம்பி ருத்ரா நாயகனாக நடிக்கும் ஓஹோ எந்தன் பேபி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்திக் சூர்யா குறித்து பேசியது வைரலாகி வருகிறது.
விஷ்ணு விஷால் தம்பி ஹீரோ
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குநர் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. இதில், விஷ்ணு விஷால் கேமியோ ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படம் வரும் ஜூலை 11ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் கதை என்ன?
ஓஹோ எந்தன் பேபி படத்தில் உதவி இயக்குநராக நடித்திருக்கும் ருத்ரா எப்படியாவது இயக்குநர் ஆகவேண்டும் என்ற கனவோடு தயாரிப்பாளர்களை சந்தித்து கதை கூறுகிறார். இதில், அவர் இயக்குநர் ஆனாரா இல்லையா என்பதை காமெடி கலந்த ரொமாண்டிக் காதல் படமாக கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். ரசிகர்கலை கவரும் வகையில் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் வெற்றிமாறன், அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
கார்த்தி எமோஷனல் பேச்சு
அப்போது பேசிய நடிகர் கார்த்தி, எல்லோருடைய வாழ்க்கையில் ஒரு அண்ணன் இருப்பது ஸ்பெஷல் தான். அப்பா தூக்கி வளர்ப்பார். அண்ணன் தான் நம்மை தோளில் தூக்கி வளர்ப்பார் அந்த வகையில் நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரன். எனக்கு ஒரு அண்ணனாக சூர்யா கிடைத்தது எனது பாக்கியம். அவரை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். நான் சினிமாவில் என்ட்ரி தரும்போது மக்கள் அனைவரும் அன்போடு வரவேற்று வாழ்த்தினார்கள். அந்த அன்போடு தான் ருத்ராவை வாழ்த்த இங்கு வந்துள்ளேன். முதல் முறையாக சினிமாவிற்கு வரும்போது அவரை வாழ்த்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என தெரிவித்தார். மேலும், சூர்யா குறித்து கார்த்தி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





















