நான் முதலமைச்சராக வரவில்லை...தக் லைஃப் ஆடியோ லாஞ்சில் கமல் வருத்தம்
Thug Life Audio Launch : மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் உரை

தக் லைஃப் இசை வெளியீடு
நாயகன் படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் கமல் இணைந்துள்ள படம் தக் லைஃப் . த்ரிஷா , அபிராமி , சிம்பு , ஜோஜூ ஜார்ஜ் , அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படியான நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தக் லைஃப் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனின் உரையரைப் பார்க்கலாம்.
தக் லைஃப் படத்தை விநியோகிக்கும் கமல்
நிகழ்வில் பேசிய கமல்ஹாசன் " தக் லைஃப் படத்தின் சேட்டலைட் மற்றும் ஓடிடி விற்பனையை மட்டுமே செய்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தை நானும் மணிரத்னமுன் சேர்ந்து தான் விநியோகமும் செய்கிறோம். எங்களுக்கு ஓரளவிற்கு வியாபாரமும் தெரியும். இந்த படத்தின் மேல் எங்களுக்கு அந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருக்கிறோம். இதை நாங்கள் எந்த தயாரிப்பாளருக்கும் போட்டியாக செய்யவில்லை" என கமல் பேசினார்
நான் முதலமைச்சராக வரவில்லை
" நான் எல்டம்ஸ் ரோட்டில் நடந்துகொண்டிருந்த பையன். என்னை திடீரென்று கூப்பிட்டு வந்து நடிகராகிவிட்டார் பாலச்சந்தர். இந்த மேடை அமைப்பதற்கான பலத்தை எனக்கு கொடுத்ததே பாலச்சந்தர் தான். என்னுடைய பாதைகளில் என்னுடைய கொள்கைகளில் நான் நடப்பதற்காக எனக்கு உதவியாக இருந்த என்னுடைய குடும்பத்தை இந்த இடத்தில் நினைவு கூறுகிறேன். நான் இதுவரை 233 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் நான் படம் எடுக்கும்போது மட்டும்தான் நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன். அதில் நான் நிறைய மறந்திருக்கிறேன். காரணம் இந்த வன்மத்தை எல்லாம் எனக்கு கேட்காமல் உங்களுடைய ஆதரவும் ஆரவாரமும் தான் என்னை தூக்கிவிட்டது கண்ணீரை துடைத்துவிட்டது தான் உண்மை. இந்த மாதிரியான ரசிகர்களுக்கு என்ன மாதிரி நன்றி சொல்வது என்று தெரியாமல் தான் அரசியலுக்கு வந்தேன்.நான் முதலமைச்சராக வரவில்லை. எம்.எல்.ஏ , எம்.பி எல்லாம் எனக்கு புரியாது. ஆனால் 40 வருடங்களாக ஒரு எம்.எல்.ஏ ஒரு தகுதி என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் பொறுமையாக செய்து வருகிறோம். ஏனால் நாங்கள் தனி மனிதர்கள். இங்கு இருந்து என்னுடன் உழைத்த தம்பிகள் எல்லாம் இன்று சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக மாறியிருக்கிறார்கள். உங்கள் தம்பிகளும் அப்படி மாற வேண்டும் சிம்பு என்பது என் ஆசை " என சிம்புவை பார்த்து கூறினார் கமல் "





















