Kamal Haasan: "போதைக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டிய தருணம்" கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கமல் இரங்கல்
Kallakurichi Illicit Liquor Death News: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்த 39 பேர்களின் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கள்ளச் சாராயம் குடித்து 39 பேர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்திய அளவில் அதிகம் கவனம் பெற்றுள்ள கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ள நிலையில், ஓய்வுப்பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த ஆணையம் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றது. அதே நேரத்தில் திரைத்துறையினரும் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். திரைத்துறையில் இருந்து நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் கருத்து பதிவிட்டுள்ளார்கள். இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் கமல்ஹாசன் இந்த விவகாரம் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
போதைக்கு எதிரானப் போரில் நாம் ஈடுபட வேண்டிய தருணம் இது
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன்.…
— Kamal Haasan (@ikamalhaasan) June 20, 2024
”கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன். தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது.” என கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.