Kakka Muttai Ramesh: அப்பாவின் மரணம்.. ரயில் பயணத்தில் அழுகை.. “காக்கா முட்டை” ரமேஷ் சோகக்கதை!
என்னுடைய அப்பா சமீபத்தில் தான் தவறினார். நான் ஷூட்டிங் விஷயமாக ஈரோட்டில் இருந்தேன். என்னுடைய அப்பாவை உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வந்தது.
தன் வாழ்க்கையில் மிகவும் பாதித்த அப்பாவின் இழப்பின் போது நடந்த சம்பவம் குறித்து நடிகர் “காக்கா முட்டை” ரமேஷ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை படம் தேசிய விருது வென்றது. இந்த படத்தில் சின்ன காக்காமுட்டை என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ரமேஷ். அப்படத்துக்குப் பின் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் ரமேஷ் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி பேசியுள்ளார்.
தவறு செய்வது புரிந்தது
அதில், காக்கா முட்டை படத்துக்கு பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகள் அந்த வயதில் தேட தெரியவில்லை. 9 வருடங்கள் போன பிறகு தான் தப்பு செய்துக் கொண்டிருக்கிறோம் என புரிந்தது. வாய்ப்புகளை நாம தேடி போக வேண்டும் என தெரிந்து கொண்டேன். வந்த வாய்ப்புகள் எல்லாம் நிறைவேறாமல் கைமீறி போயிருக்கிறது. எல்லாம் ஓகே ஆகி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை சென்ற நிலையில் தயாரிப்பு தரப்பு வேண்டாம் என சொல்லி விடுவார்கள். நிறைய முறை அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கேன். நம்ம பண்ண வேண்டிய கேரக்டரில் வேறு யாரையாவது பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும். இப்ப சின்ன சின்ன இயக்குநர்கள் படத்தில் நடித்து வருகிறேன்.
விஜய் சேதுபதி கொடுத்த நம்பிக்கை
நடுவில் நடிகர் விஜய் சேதுபதியை இயக்குநர் மணிகண்டனுடன் சேர்ந்து சந்தித்தேன். வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்தை பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோது அவருடன் பேசியதில் ஒரு நம்பிக்கை வந்தது. என்னை பார்த்ததும் கட்டிப்பிடித்து அன்பு காட்டினார். எனக்கு சினிமா தவிர்த்து எதுவும் தெரியவில்லை. நடுவில் ஒரு வேலை பார்த்தேன். அதிலிருக்கும் கஷ்டத்தைப் பார்த்து நிஜமாகவே அதிர்ச்சியாக இருந்தது.
ஒவ்வொரு இயக்குநரும் கதை சொல்லும் நீங்க இல்லைன்னா படமே இல்லைன்னு சொல்லிருவாங்க. ஆனால் கடைசியில் நடப்பது வேறாக உள்ளது. எப்படியாவது முன்னேறி எல்லாருக்கும் உதவி செய்யணும்ன்னு நினைக்கிறேன்.
வெகுவாக பாதித்த அப்பாவின் மரணம்
என்னுடைய அப்பா சமீபத்தில் தான் தவறினார். நான் ஷூட்டிங் விஷயமாக ஈரோட்டில் இருந்தேன். என்னுடைய அப்பாவை உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வந்தது. நான் அன்று மாலை அப்பாவிடம் பேசினேன். மறுநாள் காலை 9 மணிக்கு எனக்கு சென்னை செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். காலை 7 மணிக்கு போன் வருகிறது. அப்பாவுக்கு 10 மணி வரை தான் கெடு கொடுத்திருக்கிறார்கள் என அம்மா சொன்னார். நான் ரயிலில் உட்கார்ந்து ஒரே அழுகை. சென்னை வருவதற்குள் எனக்கு 150 முறை போன் வந்தது. எனக்கு போனை எடுத்து பேச தைரியமே இல்லை. காலை 10 மணிக்கு டாக்டர் நேரம் சொன்னார்கள். ஆனால் மாலை 5.45 மணியளவில் தான் அப்பா இறந்தார். என்னை பார்க்கத்தான் உயிரை பிடித்து வைத்திருந்தார் என்பதை நினைக்கும்போது இன்னும் கடினமாக இருந்தது என ரமேஷ் கூறியிருந்தார்.