என்ன வேணாலும் சொல்லு..என் வேலைய நான் பார்ப்பேன்...10 படங்களை கையில் வைத்திருக்கும் தனுஷ்
Dhanush : இளையராஜா , அப்துல் கலாம் போன்ற ஜாம்பவான்களில் பையோபிக்கில் நடிக்கும் தனுஷ் மொத்தம் பத்து படங்களை கையில் வைத்துள்ளார்

அப்துல் கலாம் பையோபிக்கில் தனுஷ்
சர்வதேச கான் திரைப்பட விழாவில் நடிகர் தனுஷின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆதிபுருஷ் திரைப்படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்கவிருக்கிறார்.இப்படத்திற்கு 'கலாம் : மிஸைல் மேன் ஆப் இந்தியா ' என டைட்டிலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அப்துல் கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகிறது. ஒரு சாதாரண மனிதனாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கலாம் இந்தியாவின் 11 ஆவது ஜனாதிபதியாகவும் இந்தியாவின் மிஸைல் மேனாகவும் கொண்டாடப் பட்டதை இந்த படம் விவரிக்கும். தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
10 படங்களை கையில் வைத்திருக்கும் தனுஷ்
நடிகர் தனுஷ் மீது பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாமல் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். தற்போது நிலைப்படி தனுஷ் அடுத்தடுத்து பத்து படங்களை கையில் வைத்துள்ளார்
இளையராஜா பையோபிக்
தனுஷ் நடிப்பில் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இளையராஜா பையோபிக். அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாக இருப்பதாகவும் படத்தின் திரைக்கதை பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
குபேரா
சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியிருக்கும் திரைபப்டம் குபேரா. தனுஷ் , நாகர்ஜூனா , ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 20 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது
இட்லி கடை
டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. நித்யா மேனன் , அருண் விஜய் , ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.பி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த இட்லி கடை படத்தின் ரிலீஸ் தற்போது அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது
தேரே இஷ்க் மே
இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார். ராஞ்சனா , அத்ரங்கி ரே ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தேரே இஷ்க் மே படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். க்ரித்தி சனோன் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் . ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது
போர் தொழில் இயக்குநர் கூட்டணியில் தனுஷ்
கடந்த 2023 ஆம் ஆண்டு அசோக் செல்வன் சரத்குமார் நடித்த போர் தொழில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் ராஜா. இவர் தனுஷூக்கு கதை சொல்லியிருப்பதாகவும் இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
ராஜ்குமார் பெரியசாமி தனுஷ் கூட்டணி
அமரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து படமெடுக்க இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. தனுஷ் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பாக ஜி அன்புச் செழியன் இந்த படத்தை தயாரிக்கிறார். கடந்த நவம்பர் மாதம் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி
கர்ணன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் மீண்டும் இணைய இருக்கிறார்கள். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போது மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் காளமாடன் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக தனுஷ் படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்
தமிழரசன் பச்சமுத்து தனுஷ் கூட்டணி
லப்பர் பந்து படத்தின் மூலம் பரவலான கவனமீர்த்த தமிழரசன் பச்சமுத்து தனுஷை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி
தனுஷின் கரியரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் வெற்றிமாறன். பொல்லாதவன் , ஆடுகளம் , வடசென்னை , அசுரன் என இந்த கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றிகளை மட்டுமே பார்த்திருக்கின்றன. அந்த வகையில் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் விரைவில் ஒரு படத்தின் அறிவிப்பு வெளியாக இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.





















