உங்க அறிவோட படம் பாத்துட்டு சூர்யா - சிவாவை திட்டுங்க; போஸ் வெங்கட் ஆவேசம்!
ப்ளூ சட்டை மாறன் சொல்றத கேட்டு படம் பார்க்காமல், உங்க அறிவோட படம் பார்த்துட்டு சூர்யாவையோ, சிவாவையோ திட்டுங்க என்று போஸ் வெங்கட் கூறியுள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் எதிர்மறையான விமர்சனம் குறித்து நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில், சூர்யா நடித்த கங்குவா 14 ஆம் தேதி திரைக்கு வந்து எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. படம் வெளியானது முதல் இன்று வரையில், படம் பற்றி விமர்சிக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அத்தனை விமர்சனங்களையும் கங்குவா எதிர்கொண்டு வருகிறது.
இதில் ஒரு சிலர் சூர்யாவையும், சிவாவையும் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் தான் நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் தன் பங்கிற்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால், படத்தை விமர்சிக்கவில்லை. படம் பார்த்து விமர்சித்தவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். விமர்சகர் என்ன சொன்னாலும் நம்பி விடுவீங்களா? அவர்களை கேட்டு தான் சாப்பிடுவீங்களா? அவர்களை கேட்டு தான் வேலைக்கு போவீங்களா? அவர்களை கேட்டு தான் உங்களுக்கு பொண்ணு பார்க்க போவீங்களா? எப்போதும் விமர்சகர்கள் சொல்வதை கேட்டு நடக்க கூடாது.
உங்களுடைய அறிவுத் திறனை சோதிக்க முதலில் நீங்கள் படம் பார்க்க வேண்டும். அதன் பிறகு படத்தை பற்றியும், படத்தில் நடித்தவர்கள் பற்றியும் விமர்சிக்க வேண்டும். விமர்சகர்கள் பணத்திற்காக நல்லா இருக்கும் படத்தை நல்லா இல்லை என்றும், நல்லா இல்லாத படத்தை நல்லா இருக்கு என்றும் மாற்றி மாற்றி சொல்வார்கள்.
நீங்கள் தான் படத்தை பார்த்து விமர்சிக்க வேண்டும். உங்களுக்காக படைக்கப்பட்டது தான் சினிமா. ஆனால், ப்ளூ சட்டை மாறன் சொல்வதை கேட்டு சிலர் படம் பார்க்க போவேன் என்று சொல்கிறார்கள். அடுத்தவர்களுக்காக தான் நீங்கள் வாழ்கிறீகளா? மற்றவர்கள் சொல்லி நீங்கள் ஏன் படம் பார்க்க வேண்டும்? விமர்சகர்களின் வியாபாரத்திற்குள் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். படம் பார்த்துவிட்டு சூர்யாவையோ, சிவாவையோ யாரை திட்ட வேண்டுமோ திட்டுங்கள்.. பாராட்ட வேண்டுமா பாராட்டுங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.