மகளின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த பணத்தை இழந்தேன்...நடிகர் பிளாக் பாண்டி சொன்ன ஷாக் தகவல்
'நிர்வாகம் பொறுப்பல்ல' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டில் நடிகர் பிளாக் பாண்டி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்

எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படத்தில் எஸ் கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தான் பண மோசடிக்கு ஆளான தகவலை பிளாக் பாண்டி பகிர்ந்துகொண்டார்
இணைய மோசடியில் பணத்தை பறிகொடுத்த பிளாக் பாண்டி
நடிகர் பிளாக் பாண்டி பேசுகையில் ''முதலில் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த நடிகர் ஆதவனுக்கு நன்றி. வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. நானும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும், எனது மனைவியும் என்னுடைய இரண்டாவது மகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்துவதற்காக என்னுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைத்திருந்தேன். நானும் என் மனைவியும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி அவருடைய செல்போனுக்கு வந்த ஒரு லிங்கை தவறுதலாக தொட்டுவிட, என்னுடைய வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணமும் திருடப்பட்டிருந்தது. எனக்கு அந்த நெருக்கடியான சூழலில் இந்த மோசடி நடைபெற்ற போது அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதை பகிர்ந்து கொள்வதில் தயக்கம் இருக்கிறது. இருந்தாலும் நானும் மோசடியால் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க்கையில் நிறைய மக்கள் பணத்தை மோசடி பேர்வழிகளிடம் இழந்து இருப்பார்கள். தற்போது ஒவ்வொருவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள். அதில் ஏடிகே ஃபைல்ஸ் என்று ஒரு லிங்க் வருகிறது. நீங்கள் எந்த சூழலில் இருந்தாலும் முழுமையான விழிப்புணர்வுடன் இதனை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய சொந்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் கவனத்துடன் இருங்கள். இந்தப் படமும் இதைத்தான் சொல்கிறது.
நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்குநர் கார்த்திக் மற்றும் படக் குழுவினருடன் தொடர்ந்து பழகி வருகிறேன். அற்புதமான குழு. கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.





















