Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
2025 ஆம் ஆண்டு வசூல் ரீதியாக தமிழ் சினிமாவிற்கு எப்படியான ஆண்டாக அமைந்தது ? தயாரிப்பாளர்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்பதை பார்க்கலாம்

2025 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தன. அதே நேரம் சிறிய பட்ஜெட்டில் உருவான படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரியளவில் வரவேற்பைப் பெற்றன. 2025 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மொத்த படங்களின் எண்ணிக்கையையும் இந்த படங்கள் ஈட்டிய வசூல் குறித்த தகவல்களையும் பார்க்கலாம்
2025 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்கள்
2025 ஆம் ஆண்டு தமிழில் மொத்தம் 285 படங்கள் வெளியாகின. இதன் மூலம் உலகளவில் திரையரங்குகளில் சுமார் ₹2500 முதல் 2700 கோடி வரை வசூல் ஈட்டியது தமிழ் சினிமா. ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த படமாக ₹500 கோடிக்கும் மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
சறுக்கிய பெரிய நட்சத்திரங்களின் படங்கள்
இந்த ஆண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மற்றும் சிறிய பட்ஜெட்டில் உருவான கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் என இரண்டுமே வெளியான ஆண்டாக அமைந்தது. நட்சத்திரங்களின் அதிக சம்பளத்தால் பெரிய பட்ஜெட் படங்கள் பல அதன் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமானதாக அமையவில்லை. அதே சமயம், நல்ல கதைக்களம் கொண்ட சிறிய படங்கள் தங்கள் பட்ஜெட்டை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு லாபம் ஈட்டின. பெரிய நட்சத்திரப் படங்கள் வலுவான தொடக்கத்தைப் பெற்றிருந்தாலும், விமர்சனங்களும், மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்மறையான பேச்சுகளும் அதன் வசூலைக் குறைத்ததால், பாக்ஸ் ஆபிஸில் சறுக்கின.
வெற்றிபெற்ற சின்ன பட்ஜெட் படங்கள்
சுருக்கமாகச் சொன்னால், நல்ல மக்கள் ஆதரவு மற்றும் விளம்பரங்களைக் கொண்ட சிறிய படங்களே பெரும் வெற்றி பெற்றன. டூரிஸ்ட் ஃபேமிலி , குடும்பஸ்த்தன், ஆண் பாவம் பொல்லாதது மற்றும் ஆண்டின் இறுதியில் வெளியான சிறை போன்ற சில படங்கள் இதற்கு உதாரணம். இந்த படங்கள் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றன.
பெரிய ஸ்டார்கள் மட்டும் போதாது
ஒரு படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தால் மட்டும் போதாது கதை சுவாரஸ்யமான விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதே முக்கியம் என்பதை இந்த ஆண்டு உணர்த்தி இருக்கிறது. அதே நேரம் திரையரங்கில் சொதப்பிய பெரிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் லாபத்திற்கு ஓடிடி நிறுவனங்களையே சார்ந்திருந்தன.
ஓடிடி நிறுவனங்கள் புதிய நிபந்தனைகள்
நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்கள் சில புதிய விதிமுறைகளை இந்த ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன. முதன்மையாக திரைப்படங்களுக்கு குறைவான விலையை நிர்ணயித்தன. மேலும் ஒரு படத்தின் திரையரங்கு வசூலைப் பொறுத்து இறுதி விலையை நிர்ணயிக்கவும் முடிவு செய்தன. இதனால், பல பெரிய ஹீரோ படங்கள் வெளியீட்டுத் தேதி குறித்த தெளிவின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திடீரென்று பெரிய நட்சத்திரங்களைக் ஒப்பந்தம் செய்வதில் தயாரிப்பாளர்களிடையே இருந்த ஆர்வம் மறைந்துவிட்டது.
2025 ஆண்டு வனிக ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு சில கடினமான பாடங்களைக் கற்றுக்கொடுத்த மற்றும் குறிப்பாக டிஜிட்டல் உரிமை விலை நிர்ணயத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட ஒரு ஆண்டாக அமைந்தது.





















