Arun Vijay: “என் படமும் ஓடணும்.. சிவகார்த்திகேயன் படமும் ஓடணும்” - அருண் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..
Captain Miller and Ayalaan : ஓராண்டு இடைவெளிக்குப் பின் அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் 1 என்ற படத்தில் நடித்துள்ளார். கிரீடம், தலைவா, தெய்வ திருமகள், தலைவி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இந்த படத்தை எடுத்துள்ளார்.
Captain Miller and Ayalaan : தன்னுடைய “அச்சம் என்பது இல்லையே மிஷன் சாப்டர் 1” படம் ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட் ஆக அமையும் என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டு வெளியான சினம் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் ஓராண்டு இடைவெளிக்குப் பின் அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் 1 என்ற படத்தில் நடித்துள்ளார். கிரீடம், தலைவா, தெய்வ திருமகள், தலைவி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இந்த படத்தை எடுத்துள்ளார். இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல், அபி ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மிஷன் சாப்டர் 1 படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.லால் சலாம் படம் தள்ளிப்போனதால் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனிடையே நேற்று மிஷன் சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது.
இதன் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய அருண் விஜய், “ரொம்ப சந்தோசமா இருக்கு. மிஷன் சாப்டர் 1 படம் பண்டிகை தினத்தில் ரிலீசாகும் முதல் படமாகும். இது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குது. சரியான தேதியில் படத்தின் ரிலீஸை முடிவு செய்த லைகா நிறுவனத்துக்கு இந்த சமயத்தில் நன்றி. நான் நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் தயாரான படம் தான் மிஷன் படம். முதல்முறையாக ஏ.எல்.விஜய்யுடன் இப்படத்தின் நான் இணைந்துள்ளேன். நாங்கள் முதலில் வேறொரு கதையை பண்ணுவதாக இருந்தது. ஆனால் விஜய் தான், மிஷன் கதையை சொன்னார். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உங்களை வச்சிகிட்டு ஆக்ஷன் இல்லாமல் என்னால படம் பண்ண முடியாது. அதேசமயம் என்னோட எமோஷனல் சீன்களும் கதையில் வைத்திருக்கிறேன். இந்த படம் நிச்சயம் தியேட்டரில் ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட் ஆக அமையும்.
இந்த படத்தில் எமி ஜாக்சன், அபிஹாசன், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரம் இயல் எல்லாரும் நடிச்சிருக்காங்க. ஜி.வி.பிரகாஷ் இசை சிறப்பா பண்ணிருக்காரு. இந்த படக்குக்காக நாலரை ஏக்கரில் மிகப்பெரிய செட் போட்டோம். இந்த படத்துக்கான விஜய்யின் திட்டமிடலை நான் பாராட்டுகிறேன். ஆரம்பம் முதல் இறுதி வரை மிஷன் சாப்டர் 1 உங்களை கவரும். ஜனவரி 12 ஆம் தேதி என்னோட படம் வரும் அதே நாளில் கேப்டன் மில்லர், அயலான் படம் வெளியாகிறது. அந்த படங்களும் நன்றாக போக வேண்டும். சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் - அருண் விஜய் இடையே மறைமுக கருத்து மோதல் இருந்து வந்தது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர். ஆனால் தற்போது அதையெல்லாம் மறந்து இருவரும் நட்பு பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன் படமும் வெற்றி பெற வேண்டும் என அருண் விஜய் சொன்னது பாராட்டைப் பெற்று வருகிறது.