Devan Movie: சொன்னபடி செய்த விஜயகாந்த்.. 100வது படத்தில் இயக்குநரான அருண் பாண்டியன்.. 21 ஆண்டுகளை நிறைவு செய்த ‘தேவன்’
21 Years of Devan Movie: தேவன் படம் ஹீரோவாக அருண்பாண்டியனுக்கு 50வது படமாகும். அதேசமயம் நடிகராக 100வது படமாகும்.
21 Years of Devan Movie: தமிழ் சினிமாவில் யதார்த்தமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களிடம் புகழ்பெற்ற அருண் பாண்டியன், ‘தேவன்’ என்னும் படத்தின் மூலம் இயக்குநரானார். அந்த படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைகிறது.
அருண் பாண்டியனின் 50வது படம்:
இந்த படம் ஹீரோவாக அருண்பாண்டியனுக்கு 50வது படமாகும். அதேசமயம் நடிகராக 100வது படமாகும். தேவன் படத்தில் அருண் பாண்டியன், விஜயகாந்த், கார்த்திக், மீனா, கௌசல்யா, விவேக், சந்திரசேகர், தலைவாசல் விஜய், மோகன் ராமன், சாய் குமார் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
அருண்பாண்டியன் புகைப்படக் கலைஞரான தலைவாசல் விஜய்யை கொலை செய்வதோடு இப்படம் தொடங்கும். தனது மரண வாக்குமூலம் அளிக்கும் வீடியோவில் தலைவாசல் விஜய்யின் ஆடியோ இல்லாமல் போகிறது. அவரது அடுத்த இலக்காக சாய்குமார் இருக்கிறார். அதற்குள் சிபிஐ அதிகாரி விஜய்காந்த் அருண்பாண்டியனை கைது செய்கிறார். ஒரு கட்டத்தில் தானியங்களை பதுக்கி கள்ள சந்தையில் சாய்குமார் விற்கும் விஷயம் விஜயகாந்துக்கு தெரிய வருகிறது. அவர் அருண்பாண்டியனுக்கு உதவுகிறார். இந்த வழக்கில் அருண் பாண்டியனை விடுவிக்க வழக்கறிஞர் கார்த்திக் உதவுகிறார். இதற்கிடையில் சாய்குமாரை அருண்பாண்டியன் ஏன் கொல்ல நினைக்கிறார் என்ற பிளாஸ்பேக் காட்சிகளோடு கதை நகரும்.
சொன்னபடி செய்த விஜயகாந்த்:
இந்த படம் தொடர்பாக அருண்பாண்டியன் ஒரு நேர்காணலில், நான் 10 வருடங்களுக்கு முன் எழுதிய கதை ‘தேவன்’. அதற்கு முன்னதாக விஜயகாந்திடம் ஒரு படம் இயக்கும் எண்ணம் பற்றி சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தேன். நான் எப்போது இயக்கினாலும் கண்டிப்பாக நடிப்பேன் என்று அவர் கூறியிருந்தார். அப்படித்தான் சொன்னபடி விஜயகாந்த் நடித்து கொடுத்தார்’ என தெரிவித்திருந்தார்.
படத்தில் கிளைமேக்ஸ் காட்சி இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. அந்த காட்சியில் மட்டுமே வரும் கார்த்திக் சீரியஸாக சென்று கொண்டிருக்கும் கதையை அசால்ட்டாக காமெடியாக மாற்றி விடுவார். அதேபோல் இளையராஜா இசையில், “தாலாட்டும் காற்றே” பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகராக மட்டுமல்லாமல் இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அருண்பாண்டியன் தன் திறமையை நிரூபித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.