Arjun Das: 'சில நேரங்களில் சில மனிதர்கள்' இயக்குநருடன் இணையும் அர்ஜூன் தாஸ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
விஷால் வெங்கட் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியது.இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஷால் வெங்கட் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியது.இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கெம்ப்ரியோ பிக்சஸ் சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற விஷால் வெங்கட் இந்த படத்தை இயக்குகிறார். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகும் இந்த படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இனிதே நடைபெற்றது. பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய தயாரிப்பாளர் சுதா சுகுமார் பேசியதாவது, ''பல டிஜிட்டல் துறைகளில் எங்கள் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது திரைத்துறையில் கால் பதிக்கிறோம். இந்தப் படம் மக்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நடிகர் காளி வெங்கட், ‘இந்தப் படம் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். அர்ஜுன் தாஸுடன் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளேன். ஆனால் எங்கள் இருவருக்கும் சேர்ந்தது போல காட்சிகள் இல்லை. ஆனால், இந்தப் படத்தில் நாங்கள் இருவரும் இணைந்தே பயணம் செய்யவுள்ளது மகிழ்ச்சி' என கூறினார்.
படம் பற்றி பேசிய இயக்குநர் விஷால் வெங்கட், ‘எனக்கு இந்த இடம் கிடைக்க நீங்கள்தான் காரணம். இந்தப் படத்திற்கும் அதே போல உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகாவுக்கு இந்தப் படம் ஒரு முக்கியப் படமாக இருக்கும். இந்தப் படமும் மனிதர்களைப் பற்றியதாகத் தான் இருக்கும். கூடுதலாக ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாகவும் இருக்கும்’ என தெரிவித்தார்.
நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது, ‘இந்த படத்தில், மிகச் சுவாரஸ்யம் காத்திருக்கிறது. நாசர் மாதிரி பெரிய ஆக்டருடன் வேலை செய்யப் போகிறேன். இமான் சாரின் ரசிகன் நான். அவர் இசையமைக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள். விஷால் மதுரை வந்து கதை சொன்னார். 3 மணி நேரம் சொன்னார். அப்போதே ஓகே சொல்லிவிட்டேன். அவரை நம்பி முழுமையாக என்னை ஒப்படைத்து விட்டேன். அநீதி படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள்’ என கூறினார்.