நலம் விசாரிப்பது நல்லதல்ல.. சேரனை சந்தித்தும் பேசாமல் சென்றது ஏன்? - பார்த்திபன் விளக்கம்!
இயக்குநராக சேரன் அறிமுகமான பாரதி கண்ணம்மா, அதனைத் தொடர்ந்து வெளியான வெற்றிக்கொடிகட்டு ஆகிய இரு படங்களிலும் பார்த்திபன் நடித்திருந்தார். இந்த 2 படங்களும் சூப்பர் ஹிட்டானது.

மறைந்த இயக்குநர் வி.சேகர் மறைவில் அஞ்சலி செலுத்த வந்தபோது இயக்குநர் சேரனை, நடிகர் பார்த்திபர் ராதாகிருஷ்ணன் கண்டுகொள்ளாமல் சென்ற நிகழ்வு சமூக வலைத்தளத்தில் பேசுபொருளானது. இந்த நிலையில் இதற்கு பார்த்திபன் பதிலளித்துள்ளார்.
நலம் விசாரிப்பது நல்லதல்ல
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “நண்பர் இயக்குனர் வி.சேகர் மறைவன்று mr சேரனுடன் பேசாமல் வந்தது பேசு பொருள் ஆனது சமூக வலைதளங்களில்… மட்டுமல்ல வலைபேச்சு உட்பட! துக்க வீட்டில் நலம் விசாரிப்பது நல்லதல்ல என ஒதுங்கிச் சென்றேன்” என கூறியுள்ளார்.
அதேசமயம் பார்த்திபன் தன்னிடம் யாசகம் கேட்ட சில நபர்களுக்கு பணம் வழங்கும் வீடியோ ஒன்றும் வைரலானது. இதற்கு பதில் கொடுத்துள்ள அவர், “எங்கு சென்றாலும் மறக்காமல் ஜிபே உபயோகிக்காமல் பணமாக மாற்றி வைத்துக்கொள்வேன். ஜிபே புகா இடத்திலும் பசி புகும் .உதவிட உதவிடாத பணமும் பிணமே. பசி துக்கம் கொண்டாடுவதில்லை. துக்கம் உயிரை பிரிப்பதிலும் வரும் , பசி உயிரை அறுப்பதிலும் வரும். இரண்டாவதை நான் நன்குணர்வேன்.
எனவே வங்கியில் வற்புறுத்தி நோட்டுகளாக வாங்கிச் செல்வேன். பின்பொரு நாள் அது ஓட்டுகளாக மாறும் என்ற எண்ணம் இல்லை. பசி கரம் நீட்டியபோது நான் எடுத்ததும் கொடுத்ததும் என்னையறியாமல் ! அதே போலவே இதை யாரோ படம் பிடித்துப் போட்டதும். கூடவே பாடலையும் கொளுத்திப் போட்ட புண்ணியவான் யாரோ? ‘இன்னொரு மனிதன் இருக்கும் வரை இங்கு யாருமே அனாதையில்லை’ என்பது என் மனித நேய மன்றத்தின் கொள்கை. அந்த இன்னொருவாக நாம் இருப்பின் …. ‘இராமன் ஆண்டாளும் இராவண ஆண்டாளும் எனக்கொரு கவலையில்லே நாந்தான்டா என் மனசுக்கு ராஜா’ ராஜ பாட்டிற்கு ரஜனியாட்டம்!” என வழக்கம்போல வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.
சேரன் - பார்த்திபன் பிரச்சினை
இயக்குநராக சேரன் அறிமுகமான பாரதி கண்ணம்மா, அதனைத் தொடர்ந்து வெளியான வெற்றிக்கொடிகட்டு ஆகிய இரு படங்களிலும் பார்த்திபன் நடித்திருந்தார். இந்த 2 படங்களும் சூப்பர் ஹிட்டானது. இதற்கிடையில் பாரதி கண்ணம்மா கிளைமேக்ஸ் காட்சி தொடர்பாக இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. அதன்பின்னர் சேரன், பார்த்திபன் அவரவர் பாதையில் பயணிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் ஒரு குப்பை படத்தைப் பார்த்து விட்டு என்ன பார்த்திபன் மாதிரி படம் எடுத்துருக்க என சேரன் பேசியதாகவும், அது தன்னை மன வருத்தத்தில் ஆழ்த்தியதாகவும் பார்த்திபன் தெரிவித்திருந்தார். எனினும் தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என சேரன் பதில் கொடுத்திருந்தார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் பங்கேற்றபோது, அவர் பிறர் காயப்படுவதை பற்றி கவலைப்பட மாட்டார் என பார்த்திபன் பேசியிருந்தார்.
இப்படியாக இருவருக்குள்ளும் கருத்து மோதல் இருந்த நிலையில் பின்னர் ஒத்த செருப்பு படம் பார்த்து விட்டு சேரன் பார்த்திபனை மனம் விட்டு பாராட்டினார். சேரன் மகள் திருமணத்திற்கு பார்த்திபன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் வி.சேகர் இறப்பின்போது இருவரும் சந்தித்தும் பேசாமல் சென்றது மீண்டும் பிரச்னையா என கேள்வி எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.






















