Thalaivar 170: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்.. குஷியில் ரஜினி ரசிகர்கள்..!
ரஜினியின் 170வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக வெளியாகவுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படமானது ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரஜினியின் 170வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படமும் ஜெய்பீம் படத்தைப் போல் உண்மைக் கதைதான் என சொல்லப்படுகிறது.
இதனிடையே ரஜினியின் 170வது படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க முதலில் சூர்யாவிடம் பேசப்பட்டதாக சொல்லப்பட்ட தகவல் உண்மையில்லை என கூறப்பட்டது. தொடர்ந்து வில்லனாக நடிக்க முதலில் விக்ரமை அணுகியதாகவும், பின்னர் அர்ஜூனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இப்படி நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக “தலைவர் 170” படம் குறித்த தகவலானது கசிந்து வருகிறது.
இந்நிலையில் புதிய அப்டேட்டாக ரஜினியின் 170வது படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப்பிடம் கதை சொல்லப்பட்டு கிட்டதட்ட அவர் சம்மதம் சொல்லிவிட்டதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது உண்மையானால் 30 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையும் படமாக இப்படம் இருக்கும். அதேசமயம் அமிதாப்பச்சனின் முதல் நேரடி தமிழ்ப்படமாகவும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.