ABP Exclusive: ஒரு சுற்றில் பங்கேற்காமல் புறப்பட்ட அஜித்... அதற்கு அவர் கூறிய காரணம்...!
ரசிகர்களின் ஆரவாரத்தால், நேற்று பல போட்டியாளர்கள் அவதியடைந்துள்ளனர். அதனால் தான் அஜித் இந்த முடிவை எடுத்துள்ளார்.
1300 பேர் பங்கேற்கும் போட்டி!
47 வது மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி, திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 24ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்து வருகின்றன.
16 வயதிற்கு உட்பட்டோர், 19 வயதிற்கு உட்பட்டோர், 21 வயதிற்கு உட்பட்டோர், 45 வயதிற்கு உட்பட்டோர், 60 வயதிற்கு உட்பட்டோர், 65 வயதிற்கு மேற்பட்டோர் என பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1300 பேர் பங்கேற்று வருகின்றனர்.
இரு நாட்கள் தங்கும் திட்டத்தில் அஜித்!
இதில் தான் நடிகர் அஜித்தும் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். நேற்று நடந்த போட்டிகளில், 50 மீட்டர், 25 மீட்டர் பிரிவுகளில் பங்கேற்ற அவர், 4 வகையான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினார். அதன் முடிவுகள் இறுதிகள் தான் தெரியவரும் நிலையில், இன்று (ஜூலை 28) அவர் 10 மீட்டர் பிரிவில் விளையாடுவதாக இருந்தது.
இதற்காக நேற்றைய போட்டியை நிறைவு செய்துவிட்டு, திருச்சியில் தங்குவதற்கு திட்டமிட்டிருந்தார் அஜித். கடைசி வரை அ ஜித் அங்கு வருவது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு போட்டோ வெளியேறி, அதன் பின் காட்டுத்தீ போல தகவல் பரவ, திருச்சி மட்டுமல்லாது, மதுரை, சிவகங்கை, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை என பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் கார்களில் அங்கு வந்து சேர்ந்தனர். காலையிலிருந்து மதியம் 3 மணி வரை சுமார் 500 பேருக்கு மேல் அஜித்துடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். அவரும் அனைவருடனும் ஒத்துழைத்து போட்டோ எடுத்துக் கொண்டார்.
மறுப்பு தெரிவித்த அஜித்!
அஜித்தை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், அவர் துப்பாக்கிச் சுடும் போட்டோவை எடுக்க கோரிக்கை வைத்தனர். ஆனால், அதற்கு அஜித் மறுத்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் போட்டியில், நான் மட்டுமே பங்கேற்பது போல போட்டோ வருவது சரியாக இருக்காது . வெற்றியாளர்கள் போட்டோ போடுவது தான் சரியாக இருக்கும் என்று மறுத்துவிட்டார். அதே நேரத்தில் தன்னுடன் போட்டோ எடுப்பதில் எந்த தயக்கமும் காட்டாமல், பொறுமையாக நீண்ட நேரம், பல மணி நேரம் நின்று போட்டோ எடுத்துள்ளார்.
திடீரென ரத்து செய்யப்பட்ட தங்கும் திட்டம்!
யாரும் எதிர்பாராத விதமாக பல்லாயிரக்கணக்கானோர் அங்கு திரண்டதால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தும் அளவிற்கு நிலை போனதால், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நிலை ஏற்பட்டது. தான் தொடர்ந்து இங்கு இருந்தால், ரசிகர்கள் திரண்டு வருவார்கள், அது சக போட்டியாளர்களுக்கு சிரமத்தை தரும் என்பதால், போட்டியிலிருந்து விலகி செல்வதாக கூறி, தனது இரு பயணத்தை ஒரு நாளாக முடித்து, அவசரமாக சென்னை திரும்பியுள்ளார் அஜித். இதனால், இன்று நடைபெறவிருந்த 10 மீட்டர் பிரிவில் அஜித் பங்கேற்க முடியாமல் போனது. துப்பாக்கிச் சுடும் போட்டியில், கவனம் சிதையக்கூடாது. ரசிகர்களின் ஆரவாரத்தால், நேற்று பல போட்டியாளர்கள் அவதியடைந்துள்ளனர். அதனால் தான் அஜித் இந்த முடிவை எடுத்துள்ளார்.