அம்பானிக்கு விலைபோன அஜித் குமார்..விதவிதமாக மீம் வெளியிட்டு ட்ரோல் செய்யும் ரசிகர்கள்
நடிகர் அஜித் குமார் கேம்பா குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ளது சமூக வலைதளத்தில் ரசிகர்களிடையே பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது

ஊடக வெளிச்சத்தில் இருந்து மறைந்து இருக்க விரும்பும் அஜித் விளம்பரத்திற்கு நடிக்க வந்துள்ளது பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது. அஜித்தின் ரேஸிங் குழுவின் ஸ்பான்சர் நிறுவனமான கேம்பா நிறுவனத்திற்காக அவர் இந்த விளம்பரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் அஜித்தின் இந்த முடிவை சமூக வலைதளத்தில் மீம்ஸ் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அஜித்குமார் ரேஸிங் அணி 24 மணி நேர ஐரோப்பியன் சாம்பியன்ஷிப், துபாயில் நடைபெற்ற போட்டி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச கார் ரேஸ்களில் பங்கேற்று சிறப்பான சாதனைகளைப் படைத்து வருகிறது. பல போட்டிகளில் போடியம் இடங்களையும் கைப்பற்றி, உலகளாவிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து களமிறங்கும் இந்த அணிக்கு அதிகளவு முதலீடுகள் தேவைப்படும் சூழலில், அஜித்குமார் ரேஸிங் அணி கேம்பா குளிர்பான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அம்பானியின் ரிலையன்ஸ் குழுவத்திற்கு சொந்தமான கேம்பா அஜித்தின் ரேஸிங் அணிக்கு அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஒப்பந்தமாகியுள்ளது. ஏற்கனவே பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் கேம்பா குளிர்பானத்திற்கு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இப்படியான நிலையில் கோலிவுட் சார்பாக அஜித் குமார் கேம்பா குளிர்பானத்திற்கு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
ட்ரோல் செய்யும் ரசிகர்கள்
கோலிவுட் நடிகர்களிலேயே எந்த சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளிலோ , பேட்டிகளிலோ கலந்துகொள்ளாத நடிகர் அஜித். நடிப்பு , குடும்பம் என தான் உண்டு தனது வேலை உண்டு என இருந்த வந்த அஜித் கார் ரேஸிங்கில் களமிறங்கியதில் இருந்து தன்னையும் தனது ரேஸிங் அணியையும் எல்லா விதங்களிலும் ப்ரோமோட் செய்து வருகிறார். பல சர்வதேச சேனல்களுக்கு பேட்டி அளிக்கிறார். அஜித்தை பற்றிய ஆவணப்படம் ஒன்றும் மிகச் சிறப்பாக உருவாகி வருகிறது. இது எல்லாமே அஜித் தனது ரேஸிங் அணிக்கு ஸ்பான்சர்களை பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன் பகுதியாகவே தற்போது இந்த கேம்பா விளம்பரத்திலும் நடித்துள்ளார். ஆனால் ரசிகர்கள் இந்த விளம்பரத்திற்கு பெரியளவில் வரவேற்பு தரவில்லை. மாறாக இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக அஜித்தை பலரும் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்தே வருகிறார்கள்.





















