A R Rahman : வாழ்க்கையில் நிறைய நந்தினிகளைப் பாத்திருக்கேன்... ஏ.ஆர்.ரஹ்மான் கலகல பேச்சு..
ஆதித்த கரிகாலனை பழிவாங்குவதற்காக எந்த எல்லைக்கும் பயணிக்கும் நந்தினி பாத்திரத்தின் எழுச்சி, அதன் முடிவு ஆகியவை இந்த பாகத்தில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்னும் நான்கு நாள்களில் திரைக்கு வரவுள்ளது.
4 நாள்களில் ரிலீஸ்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு சென்ற ஆண்டு செப்டெம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியாகி, சுமார் 500 கோடிகளைக் குவித்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து திட்டமிட்டபடி அடுத்த பாகத்துக்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, படம் முழுமைபெற்று கடந்த மாதம் தொடங்கி அடுத்தடுத்து அப்டேட்கள் படையெடுக்கத் தொடங்கின.
முதலில் 'அகநக' லிரிக்கல் பாடல் வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் டீசர், அதன் பின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா என அடுத்தடுத்து பிரமாண்டம் காட்டி சென்ற ஆண்டைப் போலவே பொன்னியின் செல்வன் படக்குழு மீண்டும் டாக் ஆஃப் த டவுனாக மாறியது.
கடந்த மார்ச்.29ஆம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், நேற்று (ஏப்.23) இந்த இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வரவேற்பைப் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறது.
பாலி சென்று இசைக்கோர்ப்பு
படத்துக்கு இசையமைப்பதற்கு பாலி சென்று மங்கி சாண்டிங் (monkey chanting) எனும் இசை முறையைத் தழுவி தேவராளன் ஆட்டம் பாடல் இசைக்கோர்ப்பு செய்யப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சென்ற பாகத்துக்காக இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.
இந்நிலையில் இரண்டாம் பாகத்துக்கான இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாலி சென்று இசைக்கோர்ப்பு செய்தது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “பாலியில் சில் அவுட் செய்யப் போய் இருந்தோம். அழுத்தம் எல்லாம் போய் யோசித்து இசையமைக்க அங்கு சென்றிருந்தோம். மேலும், இங்கே இருந்து போய் இருக்கும் கலாச்சாரம் எவ்வளவு போய் உள்ளது, அவற்றில் இருந்து ஃப்ரெஷ்ஷாக ஏதாவது எடுக்கலாமா..ஆகியவை குறித்து ஆராய்ச்சி செய்யப் போயிருந்தோம்” என்றார்.
நிறைய நந்தினி பாத்திருக்கேன்...
தொடர்ந்து “இந்தப் படத்தில் உங்கள் மனதில் நின்ற ஒரு கதாபாத்திரம் என்றால் எது?” எனும் கேள்விக்கு ‘நந்தினி’ என ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்தார்.
ஏன் நந்தினி பிடிக்கும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரஹ்மான், “நந்தினி பல அடுக்குகள் கொண்ட ஒரு கதாபாத்திரம், என் வாழ்க்கையில் நிறைய நந்தினிக்களை நான் பார்த்துள்ளேன்” என கலகலப்பாக பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
I’ve seen many Nandhini’s in my life - Ar Rahman sir😂😂😂😭😭 @arrahman
— 𝔑𝔢𝔰𝔥 𝔄𝔩𝔠𝔞𝔫𝔱𝔞𝔯𝔞 (@alcantara_nesh) April 13, 2023
From hosting AR Rahman round in Super Singer to interviewing the man himself at Ponnyin Selvan 2 audio launch proud of my woman❤️🧿✨ @Priyanka2804 #PriyankaDeshpande #ARRahman #PS2AudioLaunch pic.twitter.com/Dfomt40MUb
பொன்னியின் செல்வன் நாவலில் பலருக்கும் விருப்ப கதாபாத்திரம் நந்தினி, நன்மை, தீமை கலந்த க்ரே கதாபாத்திரத்தில் மிளிரும் அழகிய பழுவூர் இளைய ராணி நந்தினி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நிலையில், சென்ற பாகத்திலேயே அவரது நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ஆதித்த கரிகாலனை பழிவாங்குவதற்காக எந்த எல்லைக்கும் பயணிக்கும் நந்தினி பாத்திரத்தின் எழுச்சி, அதன் முடிவு ஆகியவை இந்த பாகத்தில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.