Manichitrathazhu: மலையாள சந்திரமுகிக்கு குவிந்த கூட்டம்... கேரளீயம் விழாவில் திரையிடப்பட்ட ‘மணிச்சித்திரதாழு’!
Manichitrathazhu: 'கேரளீயம்' விழாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு திரையிடப்பட்ட 'மணிச்சித்திரதாழு' திரைப்படத்தை 2000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
கேரளா மாநிலத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள், கலாச்சாரம், பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் விதமாக 'கேரளீயம் 2023' (Keraleeyam 2023) விழா கடந்த நவம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. ஒரு வார காலத்திற்கு நடைபெற இருக்கும் இந்த விழாவை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடக்கி வைத்தார். பல அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன், மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால், நடிகை ஷோபனா உள்ளிட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
'கேரளீயம் 2023' கலாச்சார பெருவிழாவின் ஒரு பகுதியாக மலையாளத் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற க்ளாசிக் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அப்படி திரையிடப்பட்ட ஒரு திரைப்படம் தான் 1993ஆம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் வெளியான ‘மணிச்சித்திரதாழு’. ஷோபனா, மோகன்லால், சுரேஷ் கோபி,நெடுமுடி வேணு, கேபிஏசி லலிதா, இன்னசென்ட் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
மாபெரும் வரவேற்பைப் பெற்று சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற இப்படம் அந்த ஆண்டிற்கான தேசிய விருதையும் கேரள மாநில அரசின் விருதையும் பெற்றது. இப்படம் தான் பின்னர் தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள வெர்ஷனில் சந்திரமுகியாக ஷோபனா சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
இந்நிலையில், நவம்பர் 3ம் தேதி மாலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கைரலி (Kairali theatre) திரையரங்கில் ‘மணிச்சித்திரதாழு’ திரையிடப்படும் என்ற அறிவிப்பை அடுத்து மக்கள் கூட்டம் திரையரங்கின் வெளியே அலைமோதத் தொடங்கியது. மழை பெய்தபோதும் பல மணி நேரத்திற்கு முன்னரே திரையரங்க வாசலில் காத்திருந்து டிக்கெட்களை பெற்றனர்.
திரையரங்கில் இருக்கும் மொத்த இருக்கைகளும் நிரம்பியதால் நடைபாதையில் எல்லாம் மக்கள் உட்கார்ந்து படத்தைப் பார்த்தனர். மேலும் பல ரசிகர்களால் படத்தைப் பார்க்க முடியாமல் போனதால் அவர்கள் ஏமாற்றமடையக் கூடாது என்ற நோக்கத்தில் மேலும் மூன்று திரையரங்கில் படம் திரையிடப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டனர். இந்தத் திரைப்பட விழாவை கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து சலசித்ரா அகாடமி நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.