Upcoming 7 Seater: பட்ஜெட்டா? ப்ரீமியமா? 4 புது 7 சீட்டர் எஸ்யுவிக்கள் - மெஜஸ்டர் தொடங்கி டெய்ரோன் வரை - லாஞ்ச் எப்போது?
Upcoming 7 Seater SUV 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் அறிமுகமாக உள்ள 4 புதிய ப்ரீமியம் 7 சீட்டர் எஸ்யுவிக்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming 7 Seater SUV 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் அறிமுகமாக உள்ள 4 புதிய ப்ரீமியம் 7 சீட்டர் எஸ்யுவிக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புதிய ப்ரீமியம் 7 சீட்டர் கார்கள்:
குடும்பம் மற்றும் நண்பர்கள் கூட்டத்துடன் நேரத்தை செலவிடும் வகையில், நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக 3 வரிசை இருக்கைகளை கொண்ட எஸ்யுவிக்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதில் சொகுசான வசதிகள் மற்றும் அம்சங்கள் நிறைந்த ப்ரீமியம் மாடல்களும் அடங்கும். அந்த வகையில் 4 புதிய ப்ரீமியம் 7 சீட்டர் எஸ்யுவிக்கள் நடப்பாண்டில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதில் இரண்டு வரும் பிப்ரவரியில் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. எம்ஜி மெஜஸ்டர்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட எம்ஜி மெஜஸ்டர், ப்ராண்டின் க்ளோஸ்டர் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஆகும். உள்நாட்டு சந்தையில் வரும் பிப்ரவரி 12ம் தேதி விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. புதிய ஸ்ப்லிட் முகப்பு விளக்குகள், பெரிய ரேடியேட்டர் க்ரில், பருமனான ஸ்கிட் ப்ளேட்கள், ராக்கெர் பேனல்ஸ் மற்றும் கனெக்டட் டெயில் லைட்ஸ் ஆகியவை ஆகியவை பிரதான வெளிப்புற மாற்றங்கள் ஆக இருக்கும்.
உட்புறத்தில் மெஜஸ்டரில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்ட் மற்றும் செண்டர் கன்சோல் கவனத்தை ஈர்க்கின்றன. புதிய அம்சங்களாக பெரிய 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், புதிய 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இரட்டை வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. மெக்கானிக்கல் அடிப்படையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ப்ராண்டின் முதன்மையான கார் மாடலாக உருவெடுக்க உள்ள மெஜஸ்டரின் விலை, 40 லட்சம் முதல் 55 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

2. ஃபோக்ஸ்வாகன் டெய்ரோன்
ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்-ஸ்பேஸ் மாடலுக்கு மாற்றாக டெய்ரான் காரை இறக்க ப்ராண்ட் திட்டமிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த காரானது இரண்டு வரிசை மற்றும் மூன்று வரிசை இருக்கை அமைவுகளில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் மூன்று வரிசை இருக்கை அமர்வு மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்கள் அடிப்படையில் 19 இன்ச் அலாய் வீல்கள், முன்புறத்தில் மசாஜ் இருக்கைகள், 15 இன்ச் சச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 30 வண்ணங்களை கொண்ட ஆம்பியண்ட் லைட்டிங் ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு சந்தையில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினை கொண்டு 201 hp மற்றும் 320 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் ட்ரைவ் ஆகிய அம்சங்கள் நிலையானதாக வழங்கப்பட உள்ளன. இந்த காருக்கான முன்பதிவு வரும் ஜனவரி 28ம் தேதி தொடங்கும் எனவும், விலை அறிவிப்பு மற்றும் டெலிவரி பிப்ரவரியில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் இந்த காரின் விலை 45 லட்சம் முதல் 50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம்.

இதையும் படியுங்கள்: Volkswagen Tayron: ஃபார்ட்சுனர் உன்ன நான் அடிக்கிறன்டா..! 7 சீட்டர், டாப் டெக் அம்சங்கள் - டெய்ரோன் SUV எப்படி இருக்கு?
3. JSW T2
JSW MG மோட்டார் கூட்டு நிறுவனத்திடம் இருந்து தனித்து செயல்படும் JSW மோட்டார் நிறுவனம், தனது முதல் கார் மாடலாக சீனாவைச் சேர்ந்த செரிஸ் ஜெடூர் ப்ராண்டின் T2 ப்ளக்-இன் ஹைப்ரிட் எஸ்யுவியை கார் மாடலை ரீபேட்ஜ் செய்து உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. வரும் ஜுன் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ல இந்த ஆஃப்-ரோட் எஸ்யுவி ஆனது, உள்நாட்டு சந்தையில் டொயோட்டா ஃபார்ட்சுனர் மற்றும் எம்ஜி மெஜஸ்டருடன் போட்டியிட உள்ளது.
சீன சந்தையில் இந்த காரானது ட்ரிம் அடிப்படையில் 2 அல்லது 3 மோட்டார்களுடன், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. மின்சார மோடில் T2 ப்ளக்-இன் ஹைப்ரிட் எஸ்யுவி ஆனது 162 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது. முற்றிலும் நாக்ட்-டவுன் செய்யப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு, மகாராஷ்டிராவில் உள்ள ஆலையில் இந்த கார் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இந்த காரின் விலை சுமார் 45 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம்.

4. கியா MQ4i
கியா நிறுவனமானது இந்திய சந்தைக்கு MQ4i என்ற கோட்நேமில் புதிய 3 வரிசை இருக்கை அமர்வுகளை கொண்ட எஸ்யுவியை தயாரித்து வருவதாகவும், நடப்பாண்டின் கடைசி காலாண்டில் இது சந்தைப்படுத்தப்படும் என்றும் ஏராளமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கோட்நேம் அடிப்படையில் இந்த எஸ்யுவி ஆனது சர்வதேச சந்தையில் கிடைக்கும் சொரெண்டோ காரின் (MQ4) இந்திய சந்தைக்கான எடிஷன் என கருதப்படுகிறது.

உள்நாட்டு சந்தையில் ஹைப்ரிட் ஆப்ஷன் கொண்ட முதல் கியா காராகவும் MQ4i இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆண்டிற்கு 50 ஆயிரம் யூனிட்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதால், இந்த 7 சீட்டர் எஸ்யுவியின் விலை போட்டித்தன்மையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 25 லட்சத்தில் தொடங்கி 35 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.























