Pongal Movies Collections: லீவு ஓவர்.. பஞ்சரான பராசக்தி.. பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் என்ன?
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி, கார்த்தி நடித்த வா வாத்தியார், ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படங்கள் வெளியானது. அதன் வசூல் நிலவரத்தைக் காணலாம்.

பொங்கல் விடுமுறை முடிந்துள்ள நிலையில், பண்டிகை கால படங்களாக தமிழில் வெளியான 3 படங்களின் வசூல் நிலவரம் பற்றிக் காணலாம்.
பொங்கல் பண்டிகை படங்கள்
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தமிழில் முதல் படமாக ஜனவரி 10ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வெளியானது. சுதா கொங்காரா இயக்கத்தில் ரவி மோகன், அதர்வா முரளி, சேத்தன், ஸ்ரீலீலா, ராணா டகுபதி, பைசல் ஜோசப் என பலரும் நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்தார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தியேட்டர் விநியோக உரிமையைப் பெற்றது. முதலில் இப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு பின்னர் ஜனவரி 10க்கு ரிலீஸ் தேதி மாற்றம் பெற்றது.
அடுத்ததாக ஜனவரி 9ம் தேதி ரிலீசாக வேண்டிய நடிகர் விஜயின் ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னையில் சிக்கியதால் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஜனவரி 30ல் ரிலீஸ் தேதியை முடிவு செய்த ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம் ஜனவரி 15ம் தேதியும், 2025 டிசம்பரில் வெளியாக வேண்டிய கார்த்தி நடித்த வா வாத்தியார் ஜனவரி 14ம் தேதியும் ரிலீஸாகியது. திரௌபதி 2 படம் ஜனவரி 15 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் பின்வாங்கியது.
நெகட்டிவ் விமர்சனங்கள்
இந்த நிலையில் விஜயின் ஜனநாயகன் படம் ரிலீசாகாமல் போனதால் அவரது ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர். அதற்கு எதிராக பராசக்தி படம் களமிறங்க போவதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே கடும் கருத்துமோதல் ஏற்பட்டது. இதன் விளைவு பராசக்தி வசூலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கடுமையாக பரப்பப்பட்டது.
இதனால் டென்ஷனான படக்குழுவைச் சேர்ந்த இயக்குநர் சுதா கொங்காரா, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆகியோர் விஜய் ரசிகர்களை கடுமையாக விமர்சித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம் கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் பொங்கல் வின்னராக மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மற்ற இரு படங்களின் காட்சிகள் குறைக்கப்பட்டு தலைவர் தம்பி தலைமையில் பட காட்சிகள் இரட்டிப்பாக்கப்பட்டது.
வசூல் நிலவரம் என்ன?
இதனிடையே பராசக்தி படம் ரிலீசான 9 நாட்களையும் சேர்த்து இந்தியாவில் ரூ.49 கோடி வசூல் செய்துள்ளதாக Sacnilk வலைத்தளம் தெரிவித்துள்ளது. இப்படத்தின் முதல் 2 நாள் வசூல் நிலவரம் மட்டுமே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் 3 நாட்களில் 10 கோடி வசூலை தொட்டுள்ளது. இப்படம் முதல் நாளில் ரூ.1.5 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.2.9 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.5.5 கோடியும் வசூல் பெற்று பொங்கல் வின்னராக மாறியுள்ளது.
கார்த்தியின் வா வாத்தியார் படம் ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரையிலான 4 நாட்களில் ரூ.7 கோடி மட்டுமே இந்திய அளவில் வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.






















