13 years of VTV : விண்ணைத்தாண்டி வருவாயாவும், ஜெஸ்ஸியும்... 13 ஆண்டுகளை கடந்தும் வழிந்தோடும் காதல்..
காதலை ஒரு புதிய கோணத்தில் காட்சிப்படுத்தி காதலர்களின் வாழ்க்கையில் அழுத்தத்தை கொடுத்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது 'விண்ணைத்தாண்டி வருவாயா'
கௌதம் மேனன் திரைப்படங்களிலேயே ஒரு வித்தியாசமான ஒரு காதல் கதை "விண்ணைத்தாண்டி வருவாயா'. இப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் இன்றும் நினைவலைகளில் ஊஞ்சலாடும் ஒரு காதல் காவியம். காதலை ஒரு புதிய கோணத்தில் காட்சிப்படுத்தி காதலர்களின் வாழ்க்கையில் புது வேகம் பாய்ச்சிய இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.
கார்த்திக் - ஜெஸ்ஸி கதாபாத்திரங்களாக மாறிய சிம்பு - திரிஷா. ஃப்ரேமுக்குள் அவர்களை காதலர்களாக அடக்கிய விதத்தை ரசிகர்கள் என்ஜாய் செய்தனர். அவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்தும் காதலால் நிரம்பி வழிந்தன. மேலும் அந்த காட்சிகளை அழகு படுத்தியது ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை. ஏ.ஆர்.ஆரின் இசையால் பாடல்கள் அனைத்திலும் காதல் வழிந்தோடியது. வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை கூட இசையால் வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. 13 ஆண்டுகளை கடந்த பின்பும் காதல் பாடல்களின் பிளே லிஸ்டில் நிச்சயமாக இவை அடங்கும்.
மதங்களால் காதல் உடைக்கப்படும் வழக்கமான செண்டிமெண்ட் என்றாலும் அவற்றை எல்லாம் உதறிவிடும் காதலர்கள் கடைசியில் பிரிகிறார்கள். இறுதியில் மீண்டும் சேரமாட்டார்களா என குழப்பத்துடன் முடிக்க பட்ட கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்து ரசிகர்களே அவர்களுக்கு பிடித்த எண்டு கார்டை போட்டுக்கொண்டனர். சினிமா மீது இருந்த மோகத்தால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அலையும் இளைஞன் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்திய சிம்பு. ஐடி கம்பெனியில் வேலைபார்க்கும் மலையாளி பெண்ணாக அச்சுஅசலாக வடிவமைக்கப்பட்ட திரிஷா. இவர்கள் இருவரின் இடையில் பரிமாறப்பட்ட உணர்வுகளை அற்புதமாக படமாக்கி அதை ரசிகர்களையும் உணர செய்தது இப்படத்தின் ஹைலைட். அது தான் இன்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ரசிகர்களுடன் கனெக்டில் வைத்துள்ளது.
இதுவரையில் ஒரு துறுதுறு இளைஞனாகவே நடித்து வந்த சிம்புவிற்கு இப்படம் ஒரு அமைதியான, ரொமான்டிக்கான, அடக்கமான ஒரு பையனாக அழகாக சித்தரிக்கப்பட்டு இருந்தது ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. இதற்கு பிறகு இப்படி ஒரு சிம்புவை பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கமும் ரசிகர்களுக்கும் எழுந்தன. காதலர்களாக சிம்புவும் - திரிஷாவும் ரசிகர்களை ஒரு பக்கம் கவர்ந்தாலும் கரகர குரலால் மெட்ராஸ் பாஷையில் படம் முழுக்க டிராவல் செய்து எளிதில் ரசிகர்களின் மனங்களில் பச்சக் என ஒட்டிக்கொண்டவர் விடிவி கணேஷ். இங்க என்ன சொல்லுது 'ஜெஸ்ஸி ஜெஸ்ஸி சொல்லுதா' என்ற அவரின் டைலாக் இன்று வரை பிரபலம். 13 ஆண்டுகளை கடந்த காதல் நிரம்பி வழியும் விண்ணைத்தாண்டி வருவாயா காலங்களை கடந்தும் காதலர்களால் கொண்டாடப்படும் .