ஒரே இரவில் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த 10 பேர் - கர்பா நடனத்தில் நிகழ்வில் பேரதிர்ச்சி
அகமதாபாத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் நடனமாடி கொண்டிருக்கும்போது திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்.
குஜராத்தில் நவராத்திரி விழாவின் போது நடைபெற்ற கர்பா நடனத்தில் 10 பேர் மரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நவராத்திரி விழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இரவில் பார்மபரிய உடை அணிந்து நடனமாடி நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கர்பா என்ற பாரம்பரிய நடனத்தில் ஆண்களும், பெண்களும் நடனமாடி நவராத்திரி விழாவை கொண்டாடினர். இதில் கர்பா நடனத்திற்கு புகழ்பெற்ற குஜராத்தில் நிகழ்ந்த அசம்பாவிதங்கள் நவராத்திரி விழாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவராத்திரி கொண்டாட்டமாக நடைபெற்ற கர்பா நடனத்தில் 10 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். அதாவது அகமதாபாத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் நடனமாடி கொண்டிருக்கும்போது திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். இதேபோல் கபத்வாஞ்ச் பகுதியை சேர்த்த 17 வயது சிறுவனும் நடனமாடி கொண்டிருக்கும்போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதேபோன்று குஜராத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேலும் 8 பேர் கர்பா நடனத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
நவராத்திரி தொடங்கியதில் இருந்து முதல் 6 நாட்களில் கர்பா நடனத்தில் 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், அதாவது மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை 521 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி ஆம்புலன்ஸ் அழைப்புகள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் நவராத்திரி விழாவை ஒட்டி கர்பா நடனமாடும் இடங்களில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என குஜராத் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே கர்பா நடனம் நடைபெறும் இடத்தில் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைப்பதை கர்பா அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சமீப காலமாக இந்தியாவில் இளம் வயதினர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கபடி விளையாடிய 20 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய மணமகன், 10ம் வகுப்பு மாணவி, ஜிம்மியில் உடற்பயிற்சி செய்த இளைஞர் உள்ளிட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில், கர்பா நடனத்தில் ஒரே இரவில் 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தது மாநில அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.