(Source: ECI/ABP News/ABP Majha)
ஒவ்வொரு நாளும் அண்ணாமலைதான் தலைப்புச் செய்தி - விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் திருமா பேசியது என்ன ?
அதிமுகவை நம்பியுள்ள மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளார் - எடப்பாடி பழனிசாமி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ அதிமுக போட்டியிட்டு இருக்க வேண்டும். அதிமுகவை நம்பியுள்ள மக்களை எடப்பாடி பழனிசாமி நடுத்தெருவில் விட்டு விட்டார், கொள்கை அடிப்படையில் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் நமக்கு பொது எதிரி பாஜகதான் என விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.
அதிமுக யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது ?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற வாகன பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரை நிறுத்தவில்லை. இதுவரை இடைத்தேர்தலில் அதிமுக பின் வாங்கியது இல்லை. எல்லா தேர்தலையும் சந்திக்க கூடிய ஒரு கட்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக, வேட்பாளரை நிறுத்தாமல் பின் வாங்குகிறது. எனவே அதிமுக யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது, எப்படி இயங்குகிறது என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. கட்சி என்றால் தேர்தலில் போட்டியிட வேண்டும். பொது தேர்தலாக இருந்தாலும், இடைத்தேர்தலாக இருந்தாலும். அதிமுக ஆட்சி செய்த கட்சி, இன்றைக்கு எதிர்க்கட்சி. வெற்றியோ, தோல்வியோ தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் சந்திக்கவில்லை வேட்பாளரையும் நிறுத்தவில்லை இதில் சூழ்ச்சி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் தலைமை பண்பு என்பதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும்
பாஜகவும், பாமகவும் ஒரு அணியில் இருக்கிறார்கள். அதே அணியில் இருந்த அதிமுக இப்போது பிரிந்து தனித்து நின்றார்கள் 40 தொகுதிகளும் படுதோல்வி அடைந்தார்கள். சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகளை குறிவைத்து தான் அதிமுக தனியே வந்து தேர்தலை சந்தித்தது. ஆனாலும் தோல்வியடைந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவுக்கு வாக்கு வங்கி உள்ளது. தற்போது அதிமுக வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள். எடப்பாடி பழனிசாமி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என வழிகாட்டி உள்ளார். அதிமுகவை நம்பியுள்ள மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளார். இதுதான் எடப்பாடி பழனிசாமியின் தலைமை பண்பு என்பதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு கட்சிக்கும் அடிப்படை கொள்கை சமூக நீதி!
திமுகவிலிருந்து பிரிந்ததுதான் அதிமுக. இரண்டு கட்சிக்கும் அடிப்படை கொள்கை சமூக நீதி. தேர்தல் அரசியலில் திமுக, அதிமுக வெவ்வேறாக இருந்தாலும் கொள்கை அடிப்படையில் இரண்டும் ஒன்று என்ற புரிதல் அதிமுக வாக்காளர்களுக்கு வர வேண்டும். நம்முடைய கொள்கை பகை பாஜக தான். நீட் வேண்டாம் என திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும் சொல்கிறது, ஆனால் பாஜக மட்டும் நீட் தேர்வு வேண்டாம் என சொல்லவில்லை.
அண்ணாமலை தான் தலைப்புச் செய்தி
தமிழகத்தில் பாஜகவை காலூன்ற செய்ய அண்ணாமலையை அனுப்பி பேச வைத்தார்கள். அண்ணாமலை நாள்தோறும் உளறிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு நாளும் அண்ணாமலை தான் தலைப்புச் செய்தி. ஆனால் என்னதான் தலைப்புச் செய்தியாக வந்தாலும் பாஜகவை ஏற்க மாட்டோம் என தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்து விட்டார்கள். சமூக நீதிக்கு எதிரான கட்சி பாஜக அந்த கட்சியோடு கூட்டணியில் இருக்கக்கூடிய பாமக இங்கே போட்டியிடுகிறது. வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு கொடுத்தது திமுக. இந்தியாவிலேயே ஓபிசி இட ஒதுக்கீட்டை பிரித்து எம்பிசி என உள் ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர். சமூக நீதிக்கு எதிரான கட்சியை சேர்ந்த அண்ணாமலையை மேடையில் வைத்துக் கொண்டு இட ஒதுக்கீடு குறித்து பேசுவது நியாயமா. சமூக நீதியின் நம்பிக்கை இருந்திருந்தால் எந்த காலத்திலும் பாஜகவோடு பாமக கூட்டணி வைத்திருக்கக் கூடாது.
வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் மோதிக்கொள்ள வேண்டும் என திமுக எப்போதும் பேசியது கிடையாது. ஆனால் பாமக பிரச்சாரம் செய்யும் இடத்தில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் மோதிக்கொள்ள வேண்டும் என திமுக நினைப்பதாக பிரச்சாரம் செய்கிறார்கள. இட ஒதுக்கீட்டில் அதிமுகவின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவு. சமூக நீதி வரலாற்றில் கலைஞரின் பங்களிப்பு அதிகம். சமூக நீதியை அடியோடு அழித்து ஒழிக்க நினைக்கும் பாஜகவோடு பாமக கூட்டணி வைத்துள்ளது. இதனை பாமகவை சேர்ந்த வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிமுக மேலிடத்து உத்தரவால் மறைமுகமாக பாமகவுக்கு ஆதரவு காட்டுகிறார்கள். இதற்கு அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக.
அதிமுகவை பலமிழக்க செய்கிறது பாஜக
அதிமுகவை பலமிழக்க செய்கிறது பாஜக. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கும் வேலையை பாமக செய்து வருகிறது. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும். அகில இந்திய அளவில் பாஜக ஒரு மாநில கட்சியை கண்டு பயப்படுகிறது என்றால் அது திமுகவை பார்த்துதான். இந்தியா கூட்டணி தலைவர்களை ஒருங்கிணைத்த பணியை செய்தவர் ஸ்டாலின். ஒரு நாளும் பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. திமுகவும், திமுக கூட்டணி கட்சிகளும் இருக்கும் வரை சமூகநீதியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. சனாதன சக்திகள் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது எனப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பொன்முடி:
நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறும் அன்புமணி நேற்று பிரச்சாரக் கூட்டத்தில் அண்ணாமலை இடம் ஏன் இதை வலியுறுத்தவில்லை. நடிகர் விஜய் மிகத் தெளிவாக சொல்லியுள்ளார் நீட் தேர்வு கூடாது. தமிழ்நாட்டுக்கு உரிமை வேண்டும் என்றும் மேலும் நமது சுகாதார துறையும், கல்வித் துறையும் மாநில பட்டியலில் இடம் பெற வேண்டும் என விஜய் பேசி உள்ளார். இதனை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார் என்றார்.