விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்
வாக்குச்சாவடி மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்குசாவடி மையங்களுக்கு மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் வாகனத்திற்கு பூஜை செய்து அனுப்பி வைக்கப்பட்டன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் 20 நாட்களாக நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை விக்கிரவாண்டியிலுள்ள 138 வாக்கு சாவடி மையங்களில் நடைபெறுகிறது.
இடைத்தேர்தலில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தல் பணியில் 1355 அலுவலர்களும் 44 பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள 53 நுண்பார்வையாளர்களுக்கும் பணியில் இருப்பர். மொத்தமாக உள்ள வாக்கு சாவடிகள் 276 ல் பாதுகாப்பு பணியில் 220 CRPF உட்பட 2651 காவல் ஆளிநர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்த தேர்தலில் கண்பார்வை இழந்தவர்கள் வாக்களிக்க ஏதுவாக பிரைய்லி வகையில் வாக்காளர்களை தேர்வு செய்து வாக்களிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
வாக்கு சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பென்சில், பேனா மை, நூல், சீல், அடங்கிய பொருட்கள் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வாக்கு சாவடிகளில் தயார் நிலைபடுத்தபட்டு வருகின்றன. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டும் மூன்று சக்கர நாற்காலிகள், தண்ணீர், நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.