Vikaravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுகிறதா? - அன்புமணி ராமதாஸ் சொன்னது என்ன?
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக கூட்டணியிலுள்ள பாமக போட்டியிடுவது குறித்த நிர்வாக குழு ஆலோசனை கூட்டம்.
விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக மாநில நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசிமுடிவெடுத்த பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக கூட்டணியிலுள்ள பாமக போட்டியிடுவது குறித்த நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கெளரவ தலைவர் ஜி.கே.மணி, மாநில நிர்வாகிகளான வடிவேல் ராவணன், தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கைச்சூர் ஆறுமுகம், பாமக முன்னாள் பொதுச்செயலாளர் தீரன், மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா அருள்மொழி, பாமக முன்னாள் எம் பி மருத்துவர் செந்தில், பாமக வழக்கறிஞர் பாலு, மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பாளர் நிறுத்துவது தொடர்பான கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாகவும், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவித்தார்.