TN Election 2021: சென்னையில் முந்துகிறது திமுக : கழகங்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது இப்படித்தான்
சென்னையில் பலதரப்பட்ட சமூகங்களை சேர்ந்த வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். உதாரணமாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக ஒரே சமூகத்தைச் சார்ந்த வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக தேர்தல் 2021 கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இன்று காலை ஏழு மணியில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மாவட்டத்தில் ; டாகடர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் , கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர் , எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி , ஆயிரம் விளக்கு , அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி என 16 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
இந்த 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. அதிமுகவின் கோட்டையாக விளங்கி வந்த இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் பின்னடவை சந்தித்து வருகிறார்.
சென்னை அரசியல் களம்:
தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படும் சென்னை கல்வி, மருத்துவம், அறிவியில், கலை, பொருளாதராம் என பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. சென்னையில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இது, உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், சென்னையில் மக்களாட்சி நிலை என்ன? அதன் ஜனநாயக பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது பெரும் விவாதப் பொருளாகவே உள்ளது. சென்னை பெரும்பாலும் திராவிட அரசியலின் அடையாளமாக கருதப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் எல்லாம் சுற்றுலாத்தளங்கள் என்பதைத் தாண்டி, திராவிட அரசியலின் இருத்தலை, தேவையை எடுத்துரைப்பதாக உள்ளது.
சென்னை பெரும்பாலும் திமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இதற்கு, நிதிக்கட்சி அரசியலும், சினிமா தொழில் நுட்பமும் முக்கிய காரணமாக இருக்கலாம். டெல்டா, கொங்கு மண்டலத்தை விட சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் காங்கிரஸின் அரசியல் ஆதிக்கம் சென்னை மாகாணத்தில் இருந்தது. 1950களில் திமுக முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டம், சமூக நீதி, வெகுஜன அரசியல், முற்போக்குவாதம் சென்னை மண்டலங்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆளுநர் ( மாநில அமைச்சரவை), சட்டப்பேரவை, நீதிமன்றம் இவைகளை உள்ளடக்கியதுதான் ஒரு மாநில அரசு. தமிழகத்தில் இவை மூன்றும் சென்னையில்தான் அமைந்துள்ளது. திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிடக் கட்சிகளின் தலைமையகமும் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளன. இருப்பினும், கடந்த சட்டமன்ற/நாடாளுமன்றத் தேர்தல்களில் சென்னை மக்களின் வாக்குகள் சதவிகிதம் குறைந்து காணப்படுகிறது. பொருளாதாரம மற்றும் சமூக அளவில் பின்தங்கிய மாவட்டங்களில் கூட வாக்குகள் விகிதம் சென்னையை விட அதிகமான உள்ளன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற மேலை நாடுகளில் கூட காணப்படாத மக்கள் வெகுஜன போராட்டம் கடந்த 2017ல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. எனவே, சென்னைவாசிகளின் அரசியல் மிகப்பெரிய முரண்பாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
எவ்வாறு ஆகினும், திருநெல்வேலி, மதுரை, கோயம்பத்தூர், சேலம் போன்ற மாவட்டங்களை விட சென்னையில் பலதரப்பட்ட சமூகங்களை சேர்ந்த வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். உதாரணமாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக ஒரே சமூகத்தைச் சார்ந்த வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றனர். 1996,2001, 2006, 2011,2016, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் ஒவ்வொரு முறையும் திமுக- அதிமுக சார்பாக குறைந்தது 7 முதல் 8 சமூகத்தினர் வேட்பாளர்களாகக் களம் இறக்கப்படுகின்றனர்.
சென்னை மாவட்டம் - அதிமுக வேட்பாளர்கள் தேர்வு
சென்னை மாவட்டம் | வன்னியர் | மீனவர் | செட்டியார் | முக்குலத்தோர் | நாடார் | ரெட்டியார் | பிள்ளை | பார்ப்பனர் | முத்தரையர் | நாயுடு | யாதவர் |
1996 | 0 | 1 | 0 | 1 | 1 | 0 | 0 | 0 | |||
2001 | 0 | 1 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 | 0 | 0 |
2006 | 1 | 1 | 0 | 1 | 0 | 0 | 0 | 1 | 0 | 2 | 0 |
2011 | 3 | 1 | 1 | 1 | 0 | 0 | 1 | 1 | 0 | 3 | 0 |
தரவுகள் சி.மணிகண்டன்
இருப்பினும், கடந்த 25 ஆண்டுகளாக ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் மீனவர் சமூகத்தைச் சார்ந்த வேட்பாளரை அதிமுக களமிறக்கியது. மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கடந்த 20 ஆண்டுகளாக பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை முன்னிறுத்தியது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த நபருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.
திமுகவைப் பொறுத்த வரை க.அன்பழகன், கலைஞர் கருணாநிதி, மு.க ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி போன்ற முக்கியத் தலைவர்கள் தொடர்ச்சியாக போட்டியிட்டு வருகின்றனர். இவர்களின் வாரிசும் தர்போது களம் இறக்கப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் பார்த்தல் இசை வேளாளர், முதலியார், நாய்டு சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்கள் அதிகமாக களம் இறக்கப்பட்டுள்ளனர். திமுகவில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் தொடர்ச்சியாக களம் இறக்கப்படுவதில்லை. உதாரணமாக, 2016 ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஸ்டாலினுக்கு பதிலாக நிறுத்தப்பட்ட கு.க செல்வம் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்டம் - திமுக வேட்பாளர்கள் தேர்வு
சென்னை மாவட்டம் | வன்னியர் | மீனவர் | செட்டியார் | முக்குலத்தோர் | நாடார் | ரெட்டியார் | இசை வேளாளர் | பார்ப்பனர் | முத்தரையர் | நாய்டு | முதலியார் |
1996 | 0 | 1 | 0 | 1 | 1 | 0 | 2 | 0 | 0 | 1 | 1 |
2001 | 1 | 1 | 0 | 0 | 1 | 0 | 2 | 0 | 0 | 2 | 1 |
2006 | 1 | 0 | 0 | 0 | 2 | 1 | 2 | 0 | 0 | 1 | 1 |
2011 | 1 | 0 | 0 | 0 | 1 | 0 | 0 | 1 | 1 |
தரவுகள்: சி. மணிகண்டன்
மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் திமுக, அதிமுக கட்சிகள் பல தரப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். திருநேல்வேலியில் கொங்கு வேளாளர் கவுண்டர், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வகுப்பினர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. கோயம்பத்தூரில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த சமூகத்தினர் வேட்பாளாராக அறிவிக்கப்படுவதில்லை. வன்னியர் சமூகங்கள் ஆதிக்கம் செலுத்தும் வட முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதில்லை. ஆனால், அனைத்து சமூகங்களும் முன்னிறுத்தப்படுகின்றன. சுருங்க சொன்னால், எந்தவொரு குறிப்பிட்ட சமூகமும், குறிப்பிட்ட வகுப்பினரும் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியாத அரசியலை சென்னை முன்னெடுத்துள்ளது.
இருப்பினும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பட்டியலின பழங்குடி வகுப்பினரும் சென்னையில் இன்றளவும் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. தாராளமயம், உலகமயம் போன்ற நவீனத்துவ வாழ்க்கை முறைக்காக நகரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட பின்தங்கிய பூர்வக்குடி மக்கள் அரசியல் பிரதிநிதித்துவம் பெற வேண்டும்.
மேலும் படிக்க:
1. Caste in Political Recruitment The Study of Two Major Dravidian Parties in Tamil Nadu by C,Manikandan