சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் பிரபல கானா பாடகர் கானா பாலா..!
பிரபல கானா பாடகர் கானா பாலா 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தமிழ் திரையுலகின் கானா பாடல்கள் மூலமாக பிரபலமானவர்கள் வெகு சிலரே. அவர்களில் கானா பாலா மிகவும் பிரபலம். சூது கவ்வும் படத்தில் இடம்பெற்ற “காசு பணம் துட்டு” பாடல் மூலம் இவர் தமிழக ரசிகர்கள் மூலம் மிகவும் பிரபலமானார். பிரபல கானா பாடகரான கானா பாலா சென்னையைப் பூர்வீகமாக கொண்டவர். அவர் புளியந்தோப்பில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கானா பாலா வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார். சுயேச்சையாக போட்டியிடும் அவர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. நகரின் மண்டலத்திற்குட்பட்ட 72வது வார்டு வேட்பாளராக களமிறங்குகிறார். இதற்காக, கானா பாலா நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக, கானா பாலா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ இது நான் பிறந்து வளர்ந்த பகுதி. இந்தப் பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதற்காக போட்டியிடுகிறான். ஏற்கனவே இந்தப்பகுதியில் உள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமானவன் என்பதால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவேன்.” என்றார்.
கானா பாலா ஏற்கனவே 2006, 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். ஆனால், அந்த தேர்தல்களில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இப்போது, மூன்றாவது முறையாக அதே வார்டில் போட்டியிடுகிறார்.
கானா பாலாவின் இயற்பெயர் பாலாமுருகன். சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் தாவரவியல் பட்டம் பெற்றவர். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கானா குயில் பாட்டு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். ஏராளமான கிறிஸ்தவ பாடல்களை பாடியுள்ளார். பிறகு என்ற படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசை மூலமாக பாடகராக 2007ம் ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானார். 2012ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி படத்தில் இடம்பெற்ற “ஆடி போனா ஆவணி” “நடுக்கடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா” போன்ற பாடல்கள் இவருக்கு மிகுந்த புகழ்வெளிச்சத்தை தந்தது.
தொடர்ச்சியாக பல படங்களில் பாடிய இவருக்கு சூது கவ்வும் படத்தில் இவர் பாடிய “காசு பணம் துட்டு” பாடலும், அந்த பாடலுக்கு இவரது நடன அசைவுகளும் இவரைப் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சென்றது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சித்தார்த் நடித்த உதயம் என்.எச்.4, நான் சிகப்பு மனிதன், போங்கடி நீங்களும் உங்க காதலும், வடகறி, மெட்ராஸ், சைவம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயண், தாஜ்நூர் உள்ளிட்ட பலரின் இசையில் பாடியுள்ளார். கடைசியாக கடந்தாண்டு ஓ மணப்பெண்ணே, ட்ரிப் ஆகிய படங்களில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்