(Source: ECI/ABP News/ABP Majha)
Tamilnadu Election 2024: அதிமுகவை அலறவிட்ட பாஜக..எத்தனை தொகுதிகளில் இரண்டாவது இடம்?
பல்வேறு இடங்களில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி பாஜக இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளது. அதன்படி அது எந்தெந்த தொகுதிகள் என்பதை பார்ப்போம்:
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் யார் அடுத்த பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி தான் 40 தொகுதிகளையும் வென்றிருக்கிறது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி பாஜக இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளது. அதன்படி அது எந்தெந்த தொகுதிகள் என்பதை பார்ப்போம்:
தென் சென்னை:
தென் சென்னை தொகுதியை பொறுத்தவரை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 2 லட்சத்து 24 ஆயிரத்து 127 வாக்குகள் பெற்றிருக்கிறார். இந்த தொகுதியில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் பாஜக வேட்பாளரான தமிழிசை செளந்தரராஜன். அவர் மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 273 வாக்குகள் பெற்றுள்ளார். தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
மத்திய சென்னை:
மத்திய சென்னையை பொறுத்தவரை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 330033 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். இந்த தொகுதியிலும் பாஜக இரண்டாவது இடத்தை கைப்பற்றி இருக்கிறது. அதன்படி அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட வினோஜ் 139209 வாக்குகள் பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 56171 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.
கோயம்புத்தூர்:
பாஜகவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட தொகுதி கோயம்புத்துர் என்பதால் தேசிய அளவில் இந்த தொகுதி கவனம் பெற்றது. ஆனால் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 351431 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறார். பாஜக தலைவர் அண்ணாமலை 280745 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன் 143867 மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
நீலகிரி:
மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியும் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்பட்டது. இந்த தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிட்டனர். இதில் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா 467947 முதல் இடத்தை பெற்றுள்ளார். அந்தவகையில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் 229862 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
வேலூர் தொகுதி:
வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் கதிர் ஆனந்த். இவர் 469956 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் 287085 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை கைப்பற்றி இருக்கிறார்.
திருநெல்வேலி:
திருநெல்வேலி தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக மோதின. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்ற ராபர்ட் ப்ரூஸ் 483222 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். அதேபோல், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 320640 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் மற்றும் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டனர். இதில் விஜய் வசந்த் 453587 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். பொன் ராதாகிருஷ்ணன் 294638 இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளார். இப்படி தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளில் அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி இரண்டாவது இடத்தை முதல் முறையாக பிடித்திருக்கிறது பாஜக. அதேபோல் தமிழ்நாட்டில் மொத்தமாக பாஜக 11.02 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.