உள்ளாட்சித் தேர்தல்: கள்ளக்குறிச்சியில் அடுத்தடுத்து சிக்கும் வெள்ளிப்பொருட்கள்...!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளிப்பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளிப்பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் முக்கிய இடங்களில் நின்று வாகன சோதனை நடத்தி உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பரிசுபொருட்கள் மற்றும் கடத்தி செல்லப்படும் மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் தனி தாசில்தார் சத்தியநாராயணன் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசாரை கொண்ட பறக்கும் படையினர் கீழ்குப்பம் காவல் நிலையம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கும்பகோணத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது உள்ளே 2 லட்சத்து 11 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் விளக்கு, கொலுசு, பாத்திரம் உள்ளிட்ட 11 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கார் டிரைவர் ரவிந்திர குப்தா (42) என்பவரிடம் விசாரணை நடத்திய போது உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி அந்த பணம் மற்றும் வெள்ளி பொருட்களை சேலத்துக்கு கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் வெள்ளிபொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து சின்னசேலம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமியிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு 8 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், சங்கராபுரம் தனி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏட்டுகள் கேசவன், ராஜராஜன் ஆகியோரை கொண்ட பறக்கும் படையினர் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் அழகாபுரத்தை சேர்ந்த அந்துவான் மகன் ஜூலியன் (32) என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த 2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதே மார்க்கத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த எரவார் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் (40) என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 1 லட்சத்து 40 ஆயிரத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட 3 லட்சத்து 40 ஆயிரத்தை கள்ளக்குறிச்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதேபோல், கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயப்பாளையம் நோக்கி சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்தி, சோதனை நடத்தியபோது, அதில் கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காரில் வந்த சேலத்தை சேர்ந்த பார்த்தீபன் என்பவரிடம் நடத்திய விசாரணையில், வெள்ளிப்பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து காரில் எடுத்து வரப்பட்ட 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 19 கிலோ வெள்ளி பொருட்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் ஒப்படைத்தனர்.