TN Lok Sabha Election 2024: வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் சேலம் மாவட்டம் - ஏற்பாடுகள் என்ன?
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை என்ன தனியாக ஆறு மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டப் வாக்கு பதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி வாக்கு எண்ணிக்கை நாளை காலை சரியாக 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்னப்பட இருக்கிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் நாடாளுமன்ற தொகுதி:
சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 25 பேர் களத்தில் இருக்கிறார்கள். 1766 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 129 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. இதில், ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 345 மையங்களில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாகவும், எடப்பாடி தொகுதியில் 321 மையங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகள் ஆகவும், சேலம் மேற்கு தொகுதியில் 297 மையங்களில் பதிவான வாக்குகள் 22 சுற்றுக்களாகவும், சேலம் வடக்கு தொகுதியில் 263 மையங்களில் பதிவாகன வாக்குகள் 19 சுற்றுகள் ஆகவும், சேலம் தெற்கு தொகுதியில் 241 மையங்களில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகள் ஆகவும், வீரபாண்டி தொகுதியில் 299 மையங்களில் பதிவான வாக்குகள் 22 சுற்றுலாவும் எண்ணப்படுகின்றன.
இதற்காக சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை என்ன தனியாக ஆறு மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது வேட்பாளர்கள், முகவர்கள், மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் என அனைவரும் வாக்கு என்னும் மையத்திற்குள் செல்போன், மடிக்கணினி, ஐபேட் போன்ற மின்சாதன பொருட்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையம்:
வாக்கு எண்ணும் மையத்திற்குள் அரசு அலுவலர்கள் வேட்பாளர்கள் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதனை முழுமையாக கடைப்பிடித்து அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்க மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வாக்கு எண்ணும் பணி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அதிலும் மின்னணு வாக்குகளை எண்ணும் ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான அரசு பொறியியல் கல்லூரி முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை வாக்கு எண்ணும் மையத்தில் அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் என அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.