PM Modi Swearing-In: பிரதமராக மோடி இன்று பதவியேற்பு! நேரில் வாழ்த்தும் உலகத் தலைவர்கள் - பாதுகாப்பு வளையத்தில் டெல்லி
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்க உள்ளார். உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்பதால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் புதிய அரசு யார்? என்பதை தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி கடந்த ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. 7 கட்ட தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது.
மோடி இன்று பிரதமராக பதவியேற்பு:
இதில், 290 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றது. நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நயுடு ஆகியய இருவரின் ஆதரவுடன் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கிறார். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 9ம் தேதி நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, பிரதமர் மோடி இன்று நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார்.
அவர் பிரதமராக பதவியேற்பது தொடர்ந்து 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பிரதமராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைக்கிறார். பதவியேற்பின்போது மோடியும் உறுதிமொழி அளிக்க உள்ளார்.
உலகத் தலைவர்கள் பங்கேற்பு:
பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக மோடி பதவியேற்க இருப்பதைத் தொடர்ந்து, அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. டெல்லியில் நடைபெறும் மோடியின் பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, செஷல்ஸ் நாட்டின் துணை அதிபர் அகமது அஃபிப். மொரிஷீயஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்பகமல்தஹால், பூடான் பிரதமர் ஷெரிங் போட்கே ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த முறை ஆசிய நாட்டின் தலைவர்கள் பெரும்பாலானோர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.
பிரதமராக மோடி பதவியேற்கும் இந்த விழாவில் அவருடன் இணைந்து முக்கி அமைச்சர்கள் சிலரும் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி போன்ற முக்கிய பா.ஜ.க. தலைவர்கள் பதவியேற்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்றும் கூறப்படுகிறது. மோடியின் பதவியேற்பு விழாவில் வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.பி.க்கள் மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சி மீண்டும் அமைய உறுதுணையாக உள்ள நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்க உள்ளனர்.
பாதுகாப்பு வளையத்தில் டெல்லி:
இவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சி தரப்பில் இருந்தும் பிரதிநிதிகள், பல நாட்டு தூதர்கள், நாட்டின் முக்கிய தொழில் அதிபர்கள், திரை மற்றும் விளையாட்டு பிரபலங்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மோடியின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்கள் பங்கேற்க இருப்பதால் ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 9000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்க இருக்கின்றனர். மோடியின் பதவிறே்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்க இருப்பதை பா.ஜ.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.