‛ஒரு ஓட்டுக்கு... ஒரு கிலோ சர்க்கரை...’ பழநி திமுக வேட்பாளரின் தாராள பிரச்சாரம்!
Palani Urban Local Body Election 2022: ‛ஓட்டு போட்டு ஜெயிக்க வைங்க... இன்னும் என்னவெல்லாம் செய்யுறேன் பாருங்க...’ என சர்க்கரையை விட இனிப்பான வாக்குறுதிகளை தந்தார்.
தேர்தல் வந்தாலே, வாக்குறுதிகள் நம்மை வட்டமிடுவது வழக்கமான ஒன்று. பெரும்பாலும் வாக்குறுதிகள் நிறைவேறுவதில்லை, நிறைவேற்றப்படுவதில்லை என்பது ஒருபுறம். ஆனால், பெரும்பாலானோர் தரும் வாக்குறுதிகள், நிறைவேறும் என்பதை விட கேட்கவே கலகலப்பாக இருக்கும். ஆனால் இங்கு ஒரு வேட்பாளர், கொடுத்துவிட்டு ஓட்டு கேட்கிறார்.
இதை வாக்குறுதியாக கூறமுடியாது. வாக்காளர்களுக்கு இலவசம் வழங்குவதும் ஒரு விதமான தேர்தல் விதிமீறல் தான். ஆனால், இவர் அதை உணராமல் தான் வாக்காளர்களுக்கு சலுகைகளை கிலோ கணக்கில் தந்து கொண்டிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம் பழநி நகராட்சியில் அதிமுக-திமுக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் , வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் பல அஸ்திரங்களை வீசி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான், பழநி 23வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் உமா மகேஸ்வரி. தேர்தல் இவருக்கு புதிதல்ல. கடந்த முறை இதே நகராட்சியில் நகராட்சி தலைவராக பொறுப்பு வகித்தவர்.
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறார். தனது வார்டில் உள்ள பகுதி ஒன்றுக்கு சென்ற அவர், அங்குள்ள மளிகை கடைக்குச் சென்றார். அப்போது அங்கு நிறைய பெண்கள் பொருட்கள் வாங்க நின்று கொண்டிருந்தனர். அதை கண்ட உமாமகேஸ்வரி, மளிகை கடையின் உள்ளே வந்து பெண்களுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது தனது செலவில், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கிலோ சர்க்கரை வழங்கி , தனக்கு வாக்காளிக்குமாறு கேட்டுக் கொண்டார். கடுகு, உளுந்து என ஏதோ ஒரு பொருளை வாங்க வந்த இடத்தில், ஒரு கிலோ இலவச சர்க்கரை கிடைத்த மகிழ்ச்சியில் அப்பகுதி பெண்கள் ஆடிப் போயினர். சர்க்கரையோடு கொஞ்சம் அரிசி, பருப்பும் கொடுத்தால், இந்த மாத பட்ஜெட்டை சமாளித்து விடுவோம் என்பதைப் போல சிலர் தலையை சொறிந்து கொண்டிருந்தனர் சிலர். அதை புரிந்து கொண்ட வேட்பாளர், ‛ஓட்டு போட்டு ஜெயிக்க வைங்க... இன்னும் என்னவெல்லாம் செய்யுறேன் பாருங்க...’ என சர்க்கரையை விட இனிப்பான வாக்குறுதிகளை தந்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார் உமா மகேஸ்வரி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்