Urban Local Body Election 2022: சேலம் : குடும்ப அரசியல் தேவையா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தேவையா? இபிஎஸ் கேள்வி..
சட்டமன்றத்தில் பொதுமக்களின் குறைகளை பேசினால், போதும் என திமுக அமைச்சர்கள் பேசுவதை தடுக்கிறார்கள்.
சேலத்தில் பனமரத்துப்பட்டி பேரூராட்சி, மல்லூர், எடப்பாடி மற்றும் தாரமங்கலம் நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது மக்களிடையே உரையாற்றிய அவர், குடும்ப அரசியல் தேவையா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தேவையா? ; இதை நகர்ப்புற தேர்தலில் மக்கள் முடிவு செய்யுங்கள். இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒரே கட்சி அதிமுகதான். நாங்கள் திமுகவில் இருந்திருந்தால் அமைச்சராகி இருக்க முடியுமா? திமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு பதவி இல்லை. பதவியில் இருப்பவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே திமுகவில் பதவிகள் வழங்கப்படுகிறது. திமுகவை தற்போது அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் அமைச்சர்களாக உள்ளனர். ஆட்கள் பிடிக்கும் வேலையை திமுக செய்து வருகிறது என்றார்.
கட்சியினரை நம்பி இல்லாமல் ஏஜென்ட்களை நம்பிதான் திமுக உள்ளது. வடமாநிலத்தில் இருந்து வந்தவர்கள்தான் திமுகவை இயக்குகின்றனர். இந்தியாவிலேயே 525 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு சாதனை படைத்த திமுக, வெற்றி பெற்றதும் எதையும் நிறைவேற்றவில்லை. மக்களை முழுவதுமாக ஏமாற்றி உள்ளது என்று கூறினார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருப்பது மக்களின் குறைகளை அரசிடம் கொண்டு செல்வதற்காக தான், சட்டமன்றத்தில் பொதுமக்களின் குறைகளை பேசினால், போதும் என திமுக அமைச்சர்கள் பேசுவதை தடுக்கிறார்கள். பொதுமக்களின் பிரச்சனை தீரும்வரை குரல் கொடுப்போம், குறைகளை எடுத்துரைப்போம் என்றார். திமுகவினர் பணம் கொடுத்த வரலாறு கிடையாது. பணத்தை எடுத்து தான் பழக்கம். திமுகவின் இனிவரும் நான்கு ஆண்டு ஆட்சியில் பட்டை நாமம் தான். திமுக 500 கோடி ரூபாய் சுருட்டுவதற்காகவே, பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்டது என்று கூறினார். இதேபோல் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்றார்கள், ஆனால் தற்போது நான்கு ஆண்டுகள் மீதம் உள்ளது பொறுமையாக தருவோம் என்று கூறுகின்றனர் என்றார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை செய்திகள் தான் வருகிறது இதுகுறித்த எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் ஏனென்றால் குற்றத்தில் ஈடுபடுபவர்களை திமுகவை சேர்ந்தவர்கள் தான் என்று விமர்சித்தார். நீட் விவகாரத்தில் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என்று முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்தார். விவாதம் நடத்துவதற்கு நாங்கள் தயார் என்று கூறி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.
ஆனால் இதுவரை திமுக சார்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. ஏனென்றால் 2010 ஆம் ஆண்டு நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தான். அதற்கு உடந்தையாக இருந்தது தமிழகத்தின் அன்றைய முதல்வர் கருணாநிதி இவர்களால்தான் நீட் தேர்வு வந்தது என்று கூறினார்.