Odisha CM: முடிவுக்கு வந்த நவீன் பட்நாயக் ஆட்சி! ஒடிசாவின் புதிய முதலமைச்சர் யார்? போட்டியில் 7 பேர்!
ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்தின் 24 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த மாநில புதிய முதலமைச்சர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று ஒடிசா. ஒடிசாவை கடந்த 24 ஆண்டுகளாக பிஜூ ஜனதா தளம் ஆட்சி செய்து வந்த நிலையில், அவர்களது ஆட்சியை தற்போது நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், ஒடிசாவின் புதிய முதலமைச்சர் யார்? என்று பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒடிசாவின் அடுத்த முதலமைச்சர் பதவியேற்க வாய்ப்பு உள்ளவர்கள் யார்? யார்? என்பதை விரிவாக காணலாம்.
1.தர்மேந்திர பிரதான்:
ஒடிசாவின் முதலமைச்சர் ஆவதற்கு பா.ஜ.க.வின் முதன்மைத் தேர்வாக தர்மேந்திர பிரதானே உள்ளார். இவர் சம்பல்பூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
2.சுரேஷ் புஜாரி:
தர்மேந்திர பிரதானுக்கு அடுத்த இடத்தில் ஒடிசாவின் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் சுரேஷ் புஜாரி உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்னணியில் இருந்து பா.ஜ.க.விற்கு வந்த இவர் பிரஜ்ராஜ்நகர் தொகுதியில் இருந்த எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளார். இவர் பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
3.கிரஷ் சந்திர முர்மு:
முன்னாள் ஐ.ஏஎஸ். அதிகாரியான கிரிஷ் சந்திர முர்மு தற்போது உலக சுகாதர அமைப்பின் தணிக்கையாளராக உள்ளார். குஜராத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்தவர். குஜராத் முதலமைச்சராக மோடி பதவி வகித்தபோது அவரது முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்தவர். மோடிக்கு நெருக்கமான இவர் ஒடிசாவின் முதலமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
4.மன்மோகன் சமல்:
ஒடிசாவின் முதலமைச்சர் பதவிக்கு மற்றொரு போட்டியாளராக மன்மோகன் சமல் பெயரும் அடிபடுகிறது. ஒடிசா மாநில பா.ஜ.க. தலைவராக அவர் பொறுப்பு வகித்து வருகிறார். ஒடிசாவில் பிஜூ ஜனதா தள ஆட்சியை அகற்றுவதில் இவரது பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால், மன்மோகனுக்கு முதலமைச்சர் பதவி தர வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
5.மோகன் சரண் மஜ்ஹி:
மோகன் சரண் மஜ்ஹி கியோன்ஜ்ஹர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயரும் முதலமைச்சர் பெயர் பட்டியலில் அடிபடுகிறது.
6.கனக்வர்தன் சிங் டியோ:
பா.ஜ.க. தலைவர் கனக்வர்தன்சிங் டியோ பாட்னகர் சட்டசபை தொகுதியில் இருந்து 1357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு ஒடிசாவில் நல்ல செல்வாக்கு இருப்பதால் இவரும் ஒடிசாவின் முதலமைச்சர் ஆவதற்கான பட்டியலில் முக்கிய போட்டியாளராக கருதப்படுகிறார்.
7.லக்ஷமண்பக்:
ஒடிசாவை 24 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த நவீன் பட்நாயக்கை 48 வயதே ஆன லக்ஷமண் கன்டபஞ்சி தொகுதியில் வீழ்த்தினார். 16 ஆயிரத்தை 344 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சரையே வீழ்த்திய லக்ஷமண் பக்கும் முதலமைச்சர் போட்டியில் முக்கிய நபராக உள்ளார்.
இவர்கள் 7 பேரும் ஒடிசாவின் முதலமைச்சர் ஆவதற்கான போட்டியில் முன்னணியில் உள்ளனர்.