Exit Poll: கடந்து போன 3 மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் சொன்னது நடந்ததா? ஒரு பார்வை!
ABP Cvoter Exit Poll: கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு மக்களவை தேர்தல்களிலும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ABP Cvoter Exit Poll: கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற மக்களவை தேர்தலானது இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தலின் கடைசி வாக்குப்பதிவு 43 நாட்களுக்குப் பிறகு, இன்று (ஜூன் 1) முடிவடைகிறது.
தேர்தல் முடிந்த அடுத்த நொடியே, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பில் என்ன முடிவுகள் வெளியாகும் என ஆவலுடன் காத்திருப்பார்கள். அதில், கிட்டத்தட்ட எந்த கட்சி அடுத்த 5 வருடங்கள் நம்மை ஆட்சி செய்யும் என்ற முடிவு தெரிந்துவிடும். இருப்பினும், தேர்தல் முடிவுகள் வருகின்ற ஜூன் 4ம் தேதி வெளியாக இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக, இந்த தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பல வேட்பாளர்களுக்கு மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொடுக்கலாம்.
கடந்த இரண்டு தேர்தல்களில் பாஜகவே ஆதிக்கம்:
கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு மக்களவை தேர்தல்களிலும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலானது ஏப்ரல் 7 முதல் மே 12 வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 16 ம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதேபோல், 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலானது ஏப்ரல் 11 முதல் மே 19ம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 23ம் தேதி அறிவிக்கப்பட்டது.
2014ல் மோடி அலை:
2014ம் ஆண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 283 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டனி 105 இடங்களையும் பெறும் என்று 8 கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன. அந்த ஆண்டு, மோடி தலைமையிலான பாஜக அனைவரின் கணிப்புகளையும் பொய்யாக்கி, பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களை பெற்று அசத்தியது. அதேசமயம் காங்கிரஸ் - ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெறும் 60 இடங்களை மட்டுமே பிடித்தது. இதில், பாஜக தனித்து 282 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.
2019 கருத்து கணிப்பு சொன்னது என்ன..?
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 306 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டனி 120 இடங்களையும் பெறும் என்று 13 கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன. ஆனால், இதை மீறி பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 93 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதில் பாஜக 303 இடங்களிலும், காங்கிரஸ் 52 இடங்களிலும் தனித்து வெற்றி பெற்றன.
2009ம் ஆண்டு என்ன நடந்தது..?
2009 மக்களவை தேர்தலை பொறுத்தவரை, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் - ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 195 இடங்களும், பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 185 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் - ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 262 இடங்களிலும், பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணி 158 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் மட்டும் 206 இடங்களிலும், பாஜக 116 இடங்களிலும் தனித்து வெற்றி பெற்றன.
இதையடுத்து, இன்று 7ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பின்னர், எந்த கட்சிக்கு சாதகமாக கருத்துக்கணிப்புகள் வெளியாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.