PM Modi: ஊழல்வாதிகள் என்னை தடுக்கவும், மிரட்டவும் முயற்சிக்கின்றனர் - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
Lok Sabha Elections 2024: 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து ஜூன் மாதம் முதல் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கட்சிகள் 18வது மக்களவை தேர்தலுக்கு தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது. ஆட்சியில் உள்ள பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள 25க்கும் மேற்பட்ட கட்சிகளை இணைத்து தேர்தலைச் சந்திக்கின்றது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை:
அதேபோல் மக்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கட்சிகள் மட்டும் இல்லாமல் பல மாநிலக் கட்சிகள் இணைந்து I.N.D.I.A கூட்டணி என்ற பெயரில் தேர்தலை எதிர்கொள்ள பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரமான ருத்ராபூரில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் உத்தரகாண்டில் அதிக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, தடுக்கவும் முயற்சிக்கின்றனர். ஆனால் ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகளை அவர்களால் ஒருபோதும் தடுக்க முடியாது.
வலுவான தாக்குதல்கள் தொடரும்
ஊழல் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எனது தலைமையிலான மூன்றாவது ஆட்சிக் காலத்திலும் தொடரும். எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் கட்டாயம் நடைபெறும். கேளிக்கைகளிலும், கொண்டாட்டங்களிலும் ஈடுபடுவதற்காக இந்த நரேந்திர மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே நான் பிறந்துள்ளேன். நரேந்திர மோடியின் உத்தரவாதம் என்பது உத்தரவாதத்தை நிறைவேற்றுவது மட்டும்தான் என பேசினார்.
ஊழல் குற்றச்சாட்டுகளில் அமலாக்கத்துறை மூலம் பல்வேறு அரசியல்வாதிகள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு
இதற்கு பின்னால் பாஜக இருப்பதாகவும், பாஜகவின் அரசியல் அழுத்தத்தினால்தான் இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கு பெயில் கூட வழங்கப்படவில்லை எனவும் கூறி I.N.D.I.A கூட்டணியினர் டெல்லியில் உள்ள ராம்லீலா போராட்டம் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் வரும் 19ஆம் தேதி முதல் ஜூன் மாதம் முதல் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.