Lok sabha Election2024: திமுக வேட்பாளர்களில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கூட இல்லை, இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம் - ஹரி நாடார்
ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் எங்கள் சமுதாய மக்களை மதிக்காததால் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதுபோன்ற நிலை உருவாகும்.
2021 ம் ஆண்டு பனங்காட்டு படை கட்சி சார்பில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 37 ஆயிரம் வாக்குகள் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஹரி நாடார். இந்த நிலையில் இன்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, "உண்மையிலேய வருத்தம் அளிக்கிறது. ஆயிரம் நாட்களுக்கு மேலாக பெங்களூர் சிறையில் இருந்து நெல்லை மண்ணில் கால் வைக்கும் போது இந்த பேருந்து நிலையத்தை பார்த்து வேதனை அளிக்கிறது. பெரியார் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டி உள்ளனர். பெரியாருக்கும் இந்த திருநெல்வேலி மண்ணிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. சமூக நீதி பேசும் திமுக அரசு அவர்களின் வேட்பாளர்களாக இந்த 2024 தேர்தலில் 21 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். அதில் ஒரு வேட்பாளர் கூட நாடார் சமுதாயத்தை சார்ந்தவர் இல்லை என்று நினைக்கும் போது ஒட்டுமொத்த சமுதாயமும் உருக்குலைந்து நிற்கிறது. காரணம் தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய சமுதாயம். ஒரு வேட்பாளரை கூட நிறுத்தாதது மிகுந்த மன வேதனையை தருகிறது.
ஏற்கனவே ஆலங்குளம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் நிரூபித்திருக்கிறோம். அதை மறந்திருந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் சமுதாயத்தை புறக்கணிக்கும் நபர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம். ஒரே தொகுதியில் போட்டியிடும் நபர்கள் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களில் எவர் சமுதாயத்திற்காக பாடுபடுகிறார், குரல் எழுப்புவார் என்பதை பொறுத்து எங்களுடைய ஆதரவை வழங்குவோம். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கனிமொழி எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றால் நாட்டை ஆளும் முதல்வரும் எங்கள் சமுதாயத்தைச் சார்ந்தவரா?" என கேள்வி எழுப்பினார். மாற்று சமூகத்திற்கு கொடுக்கும் மரியாதையை பெரும்பான்மை மக்களாக உள்ள நாடார் சமுதாயத்திற்கும் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் சமுதாய மக்களை மதிக்காததால் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதுபோன்ற நிலை உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.