LOK SABHA ELECTION 2024: திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1,722 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1533099 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 1722 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1,722 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல், முத்திரைகள், மெழுகுவர்த்தி, மை, பேப்பர், பேனா, பென்சில், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உள்ளிட்ட 34 வகையான பொருட்கள் திருவண்ணாமலை தாலுக்கா வளாகத்தில் இருந்து பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரமான பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பெட்டிகள் சரியாக உள்ளதா, பெட்டியை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரமான பாஸ்கர பாண்டியன் கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிகள்:
திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை என 6 தொகுதிகள் அடங்குகிறது. இதேபோல் ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் ஆரணி, வந்தவாசி, போளூர், செய்யார் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் அடங்குகிறது.
வாக்காளர்கள் விவரம்:
திருவண்ணாமலை நாடாளுமன்ற பொருத்தவரை 754533 ஆண் வாக்காளர்கள், 778445பெண் வாக்காளர்கள் மற்றும்121 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1533099 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 53 ஆயிரத்து 391 வாக்காளர்கள் முதல் தலைமுறை வாக்காளர்களாகும். திருவண்ணாமலை நாடாளுமன்ற 6 சட்டமன்றத் தொகுதிகளில் 1722 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 101 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை மிகவும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் 120 நுன்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் 8308 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என 3600 பேர் ஈடுபட உள்ளனர். மேலும் வாக்குச்சாவடிகளுக்கு பொருட்களை அனுப்பிவிட்டு பதட்டமான வாக்கு சாவடியை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கர பாண்டியன் ஆய்வுமேற்கொண்டார்.