உள்ளாட்சி தேர்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நிலவரம் இதுதான்!
உள்ளாட்சி தேர்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல் கட்டதேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டமாக இன்று 9ம் தேதி சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற தொடங்கியது. இதில் 9 மாவட்டங்களில் 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதில் ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12,376 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
9 மாவட்டங்களில் மொத்தம் 6,652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுக்களை போடவேண்டும். காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்க உள்ளதையொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டு பெட்டிகள், ஓட்டுச் சீட்டுகள், அழியாத மை ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்தும் 100 மீட்டர் தூரத்துக்கு அடையாள கோடு வரையப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு பணிக்காக 40 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மூலமும் வீடியோ மூலமும் ஒளிப்பதிவு செய்யப்பட உள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 11 ஒன்றியங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது . விழுப்புரம் மாவட்டத்தில் 6ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் 3,14,449 ஆண் வாக்காளர்களும், 3,17,330 பெண் வாக்காளர்கள், 6 மூன்றாம்பாலினத்தவர் உட்பட 6,31,785 பேர் வாக்களித்தனர். இதில் 83.65 சதவீத வாக்குகள் பதிவானது. இதே போல் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 1,95,322 ஆண்வாக்காளர்கள், 1,94,274 பெண் வாக்காளர்கள் மற்றும் 2 மூன்றாம்பாலினத்தவர் உட்பட 3,89,598பேர் வாக்களித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82.25 சதவீத வாக்குகள் பதிவானது.
விழுப்புரம் மாவட்டத்தில் காணை, கோலியனூர், மயிலம், மரக் காணம், மேல்மலையனூர், வல்லம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் 1,379 வாக்குப்பதிவு மையங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இத்தேர்தலில் 12 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு 82 பேரும், 135 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 625 பேரும், 316 ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகளுக்கு 1239 பேரும், 2337 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 7,009 பேரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணியில் 11,411 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய 5 ஒன்றியங்களில் 950 வாக்குப்பதிவு மையங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் 8 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு 49 பேரும், 88 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 337 பேரும், 180 ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகளுக்கு 605 பேரும், 1,308 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 4,019 பேரும் போட்டியிடுகின்றனர்.