![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Local body election | இந்த இடத்தில்தான் என்னை கைது செய்தார்கள் - செண்டிமண்ட் பேசி வாக்கு சேகரித்த உதயநிதி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரதில் தன்னை கைது செய்து செய்ததை நினைவு கூர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
![Local body election | இந்த இடத்தில்தான் என்னை கைது செய்தார்கள் - செண்டிமண்ட் பேசி வாக்கு சேகரித்த உதயநிதி Local body election | This is where I was arrested - Udayanidhi who spoke as a sentimentalist and collected votes in Mayiladuthurai Local body election | இந்த இடத்தில்தான் என்னை கைது செய்தார்கள் - செண்டிமண்ட் பேசி வாக்கு சேகரித்த உதயநிதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/1e330e0e7dd3a46eedbdf7d2d48e24d9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை ஆனது, பிப்ரவரி 5 ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மனுக்கள் சரிவர நிரப்பப்படாதது, கையெழுத்து இல்லாதது, சரியான ஆவணங்கள் இல்லாதது, முன்மொழிவாளர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேட்புமனு பரிசீலனையில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 838 மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து அவர் கடலூர் மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திடீரென பிரச்சாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, திமுகவினர், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உதயநிதியின் பேச்சை கேட்பதற்காக குத்தாலம் கடைவீதியில் கூடினர். இதனையடுத்து குத்தாலத்திற்கு வந்த உதயநிதி பிரச்சார வாகனத்தில் ஏறி நிற்காமல் உள்ளே அமர்ந்தபடியே இரண்டு நிமிடங்கள் பேசி சென்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சாரப் பரப்புரை பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட போது ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டியதற்காக குத்தாலம் கடைவீதியில் மதியம் 3 மணியளவில் கைது செய்யப்பட்டு அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சுமார் 8 மணி நேரம் கடந்து இரவு 11 மணிக்கு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின் முதன் முறையாக குத்தாலத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இதே இடத்தில்தான் என்னை கைது செய்து எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தார்கள் அதன் பின்னர் தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்று தலைவர் அவர்கள் முதல்வர் ஆகி உள்ளார்கள். அதனை தொடர்ந்து மீண்டும் தற்போது பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன் என தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது இச்சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசினார்.
மேலும் கடந்த 8 மாத கால திமுக கட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து மீதமுள்ள நாட்களில் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வெற்றி பெற வேண்டும் என கூறி தனது உரையை முடித்து கொண்டார். உதயநிதி ஸ்டாலின் நீண்ட உரை ஆற்றுவார் என மக்கள் காத்திருந்த நிலையில் வாகனத்தின் மேல் ஏறி நின்று நீண்ட நேரம் பேசாமல் வாகனத்தின் உள்ளேயே பேசிவிட்டு சென்றது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)