Local body election | ஸ்டாலின் தான் வந்துட்டாரே விடியல் தந்துட்டாரா ? - நத்தம் விஸ்வநாதன் கேள்வி
’’முதலமைச்சர் ஸ்டாலினால் நேரடியாக பிரச்சாரம் செய்யமுடியாமல் காணொலி மூலம் பிரச்சாரம் செய்கிறார். பொதுமக்கள் திமுக அரசு மீது அதிருப்தியில் இருப்பதால் நேரடியாக பிரச்சாரம் செய்யமுடியாது’’
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையியில் பரப்புரை களம் சூடு பிடித்துள்ளது. நாளை மாலை உடன் பரப்புரை ஓய்வதால் அனைத்து கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் 24 வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நலத்திட்டங்களை எடுத்து கூறி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த பிரச்சாரத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்று இந்த 9 மாத காலத்தில் கருப்பு, சிவப்பு துண்டு போட்டவர்கள் அதிகாரத்தை கையில் எடுத்து கள்ளச்சாரயம், நில அபகரிப்பு, அரசு அதிகாரிகளை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து என திமுகவினர் ஈடுபடுகின்றனர். ஸ்டாலின் தான் வந்துட்டாரு விடியல் தந்துட்டாரா என்று கேள்வியெழுப்பி அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை மூடி மறைக்கும் விதமாக அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் அம்மா பேர் வந்தாலே திமுகவினரால் மூடப்படுகிறது என குற்றம் சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாத 1000 ரூபாய் வழங்கப்படும் மற்றும் சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதிகள் அளித்தார்கள் தற்போது செயல் படுத்தப்படவில்லை எனவும் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுகவினர் தெரிவித்தனர் 15,000 கோடிக்கு 15 பைசா கூட ரத்துசெய்யப்பட வில்லை, நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வில்லை. மக்களை ஏமாற்றி மோசடியான வாக்குறுதிகளை கொடுத்தும், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தும், நிறைவேற்றாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் இவர் உண்மையான முதலமைச்சர் இல்லை என்றும் பொய்யினை சொல்லி முதலமைச்சர் ஆகி இருப்பதால் இவர் பொய் முதலமைச்சர். உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சி தலைவர்கள் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்கின்றனர் முதலமைச்சர் ஸ்டாலினால் நேரடியாக பிரச்சாரம் செய்யமுடியாமல் காணொலி மூலம் பிரச்சாரம் செய்கிறார். பொதுமக்கள் திமுக அரசு மீது அதிருப்தியில் இருப்பதால் நேரடியாக பிரச்சாரம் செய்யமுடியாது.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சியில் கலெக்சன், கமிசன், கரப்சன் ஊழல் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு உடன் 5,000 ரூபாய் தர வேண்டும் என போராட்டம் நடத்திய ஸ்டாலின் தற்போது அவரது ஆட்சியில் பொங்கல் பரிசு தொகை பொதுமக்களுக்கு வழங்காமல் நாமம் போட்டுவிட்டார் என நத்தம் விஸ்வநாதன் குற்றம் சாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக பழனி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்