Local Body Election | தஞ்சாவூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 61 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூபாய் 61ஆயிரத்து 500 ரொக்க பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு நிலை 1 ல் பிடிஒ பிரபாகரன், சிறப்பு வட்டாட்சியர்கள் ஜெயலெட்சுமி, ரகுராமன், நிலை 2 ல் பிடிஒ ரமேஷ், கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வம், சிறப்பு வட்டாட்சியர் ஜானகிராமன், நிலை 3இல் கும்பகோணம் சிறப்பு வட்டாட்சியர் இளமாருதி, ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, டாஸ்மாக் உதவி மேலாளர் வெங்கடேஸ்வரன், நிலை 4இல் மாவட்ட கல்வி அலுவலர் அருணகிரி, கும்பகோணம் சிறப்பு வட்டாட்சியர் பிரேமாவதி, சிறப்பு வட்டாட்சியர் முருககுமார் ஆகியோருக்கு தலா இரண்டு போலீசாரும்,
கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளுக்கு நிலை 1இல் பிடிஒ சுவாமிநாதன், சிறப்பு வட்டாட்சியர் சுசிலா, வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ரமேஷ், நிலை 2இல் அண்மாப்பேட்டை பிடிஒ அண்ணாதுரை, சிறப்பு வட்டாட்சியர் சித்ரா, கும்பகோணம் ஈஎஸ்ஒ கார்த்திகேயன், நிலை 3இல் சிறப்பு வட்டாட்சியர் திருமால், பிடிஒ சுதா, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், நிலை 4இல் பிடிஒக்கள் ராஜூ, பூங்குழலி, சிறப்பு வட்டாட்சியர் வெங்கடாச்சலம், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளுக்கு சிறப்பு வட்டாட்சியர்கள் சாந்தகுமார், தாரனிகா, பிடிஒ கிருஷ்ணமூர்த்தி, அதிராம்பட்டிணம் நகராட்சி பகுதிக்கு வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன், பிடிஒ தவமணி, சிறப்பு வட்டாட்சியர் செந்தில்குமார் என தேர்தல் பறக்கும் படையினராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் அமலக்கு வந்துள்ள நிலையில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை, கொண்டிராஜபாளையம் அருகே பறக்கும் படை அலுவலர் ரமேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், திருநாவுக்கரசு ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூபாய் 61ஆயிரத்து 500 ரொக்க பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சையை சேர்ந்த கெவின் ஜார்ஜ் என்பதும், வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இருப்பினும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் பறக்கும் படை அலுவலர்கள் 61 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 87 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜனவரி 28 ஆம் தேதி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஜனவரி 29 ஆம் தேதி தஞ்சாவூர் மாநகராட்சியில் 2 பேரும், அதிராம்பட்டினம் நகராட்சியில் ஒருவரும் என மொத்தம் 3 வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதை அடுத்து, ஜன.31 ந்தேதி தஞ்சாவூர் மாநகராட்சியில் 3 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில் ஒருவரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒருவரும், பேரூராட்சிகளில் 44 பேரும் என மொத்தம் 49 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 10 பேரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 5 பேரும், பேரூராட்சிகளில் 20 பேரும் என மொத்தம் 35 பேர் மனு தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் இதுவரை தஞ்சாவூர் மாநகராட்சியில் 15 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில் ஒருவரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 6 பேரும், அதிராம்பட்டினம் நகராட்சியில் ஒருவரும், பேரூராட்சிகளில் 64 பேரும் என மொத்தம் 87 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.