மேலும் அறிய
Local body election | கன்னியாகுமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் 33 லட்சம் பறிமுதல்
மோட்டார்சைக்கிள் ஒன்றில் வந்த நபர் ஒருவரும் எந்தவொரு ஆவணமும் இன்றி ரூ.1 லட்சம் வைத்திருந்தார். பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

அதிரடிகாட்டிய தேர்தல் பறகும் படை அதிகாரிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், கொல்லங்கோடு, பத்மநாபபுரம், குழித்துறை நகராட்சி மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பரிசு மற்றும் பணம் ஆகியவை சப்ளை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

75 பறக்கும் படையினர் மூன்று சுற்றுகளாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திற்பரப்பு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் அந்த வழியாக வந்த டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.63 ஆயிரம் இருந்தது அதற்குரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மோட்டார்சைக்கிள் ஒன்றில் வந்த நபர் ஒருவரும் எந்தவொரு ஆவணமும் இன்றி ரூ.1 லட்சம் வைத்திருந்தார். பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பிறகு மாவட்டம் முழுவதும் இதுவரை .33 லட்சத்து 50 ஆயிரத்து 920 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நாகர்கோவில் மாநகர பகுதிகளிலும் பல்வேறு வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்கவும்





















