Karti Chidambaram: “மோடி ஃபேஷன் ஷோ கூட நடத்தட்டும்.. ஓட்டு விழாது” - தக் லைஃப் செய்த கார்த்தி சிதம்பரம்!
சென்னை வந்த பிரதமர் மோடி பனகல் பார்க் முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன பேரணியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
பிரதமர் மோடி என்ன செய்தாலும் பாஜகவுக்கு ஓட்டு விழாது என சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 2024
ஒட்டுமொத்த இந்திய தேசமும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலை நோக்கி காத்திருக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில் வழக்கம்போல மத்தியில் பாஜக vs காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி காங்கிரஸ் கட்சி, பாஜகவை வீழ்த்த “இந்தியா” கூட்டணி அமைத்துள்ளது.
இதனிடையே தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் யாருக்கு எந்தெந்த தொகுதிகளில் வெற்றி கிடைக்கப் போகிறது என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. மக்களின் எண்ணங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்த அரசியல் கட்சிகள், அவர்களை கவர விதவிதமான திட்டங்களையும், வித்தியாசமான பரப்புரை பாணிகளையும் கையாண்டு வருகின்றனர்.
இறுதி கட்டம்
நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் மக்களை சந்திப்பதில் இரவு, பகல் பாராமல் வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி 4 நாட்கள் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதற்காக நேற்று சென்னை வந்த அவர் பனகல் பார்க் முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன பேரணியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
மோடி Road show என்ன Fashion show கூட நடத்தலாம் .
— With P.Chidambaram - Fan of P.Chidambaram (@wthPChidambaram) April 9, 2024
மரண கலாய் @KartiPC 😀😀 pic.twitter.com/3kkQHgfywI
அவருக்கு பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அதேசமயம் பிரதமர் மோடியின் இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அந்த வகையில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான கார்த்தி சிதம்பரத்திடம் ரோடு ஷோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பாஜகவுக்கு ஓட்டு விழாது
அதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், “மோடி ரோடு ஷோ என்ன.. பேஷன் ஷோ கூட நடத்தட்டும். அதையும் வேடிக்கை பார்க்கிறவர்கள் பார்ப்பார்கள். ஆனால் ஓட்டுப்போடுவது என்பது திமுகவுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் தான்” என கிண்டலாக பதிலளித்தார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.